168
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நாளை திங்கட்கிழமை அழைக்கப்படவுள்ளது.
வழக்குத் தொடுநர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் அதிபதி எஸ்.குமாரரத்தினம் தீர்பாயத்தில் முன்னிலையாவார். அவர் 9 சந்தேகநபர்களுக்கும் எதிரான குற்றப்பத்திரிகையை தீர்பாயத்தில் முன்வைப்பார். அத்துடன் சாட்சியங்களை அழைப்பதற்கான அனுமதியையும் பிரதி மன்றாடியார் அதிபதி தீர்பாயத்திடம் கோருவார்.
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கூடும்.
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் 9 சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள்.
9 சந்தேகநபர்களையும் இந்த வழக்கின் எதிரிகளாக இணைக்குமாறு கோரி அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பிரதி மன்றாடியார் அதிபதி தீர்ப்பாயத்திடம் முன்வைப்பார். வழக்கை நெறிப்படுத்தத் தேவையான சாட்சியங்களின் விவரங்களையும் அவர் முன்வைப்பார். சாட்சிகளை உரிய திகதியில் அழைப்பதற்கான அனுமதியையும் தீர்ப்பாயத்திடம் பிரதி மன்றாடியார் அதிபதி கோருவார்.
இந்த நிலையில் தீர்ப்பாயத்தின் அமர்வு ஆரம்பமாகும் திகதியை தீர்ப்பாயத்தின் தலைவர் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
மாணவியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அரச சாட்சியாக உறுதியுரை செய்தார். மேலும் 2 சந்தேகநபர்கள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய 9 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்படவுள்ளன. வழக்கில் 23 பேர் சாட்சிகளாக இணைக்கப்படவுள்ளனர்.
இந்த வழக்கை விசாரணை செய்ய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயத்தை தலைமை நீதியரசர் நியமித்தார்.
Spread the love