மேற்குவங்கத்திலிருந்து பிரிந்து கூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சி இன்று முதல் காலவரையறையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதனால், கடைகள் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரமான டார்ஜிலிங் மலைப் பகுதி மக்கள், தங்கள் பகுதியை மேற்கு வங்கத்தில் இருந்து பிரித்து கூர்காலாந்து உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இன்று முதல் கூர்காலாந்து பகுதியில் முழு அடைப்புக்கு அக்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். பாடசாலைகள், கல்லூரிகள், நீதிமன்றம், வங்கி ஆகியவை தவிர்த்து மீதமுள்ள அனைத்து மத்திய, மாநில அலுவலகங்களும் அடைக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் முக்கிய இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த கூர்காலாந்து போராட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் சட்ட விரோதமானது என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.