ஜனநாயகத்தைக் கட்டிக் காத்து, நல்லாட்சி புரியப் போவதாக உறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் போக்கிலேயே சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்குவதில் மறைமுகமாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது
முன்னைய அரசாங்கம் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் நாட்டில் நிலவிய பயங்கரவாத நிலைமைக்கு முற்றுப்புள்ளி இட்டது என்றும், பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இராணுவத்தினர் நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தார்கள் என்றும் பிரசாரம் செய்தது.
ஆயுத ரீதியான பயங்கரவாதத்தை ஒழித்ததாக பெருமை பேசிய அந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிய நல்லாட்சி அரசாங்கம் மறைமுகமாக – திரை மறைவில் மற்றுமோர் வடிவத்திலான பயங்கரவாதச் செயற்பாடுகளை ஊக்குவிக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்திற்கே பயங்கரவாதம் என பெயர் சூட்டப்பட்டிருந்தது. தார்மீக வழியில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடிய தமிழ் அரசியல் தலைவர்களையும், தமிழ் மக்களையும் அடக்கியொடுக்கியதன் விளைவாகவே ஆயுதப் போராட்டம் தலை தூக்கியிருந்தது.
ஆயுதப் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக, அரசியல் தீர்வுக்காக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை, பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் அரசியல் இலாபம் கருதி மறந்துவிட்டார்கள். மறைத்தும் விட்டார்கள். அந்தப் பேச்சுவார்த்தைகள் பற்றி எவரும் இப்போது கருத்து கூறுவதில்லை. மாறாக, அரசியல் தீர்வுக்காக சரிசமமாக அமர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்திய விடுதலைப்புலிகளை வாய் கூசாமல் பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றார்கள். தேவையானபோது அவர்களை சாடுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.
இது முன்னைய பயங்கரவாதம். ஆனால் தற்போது குறிப்பிடப்படுகின்ற பயங்கரவாதம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தாக்குதல்களாகவும், இன, மத ரீதியான வெறுப்பூட்டும் பரப்புரைகளாகவும் இனம் காணப்பட்டிருக்கின்றன.
நாட்டின் பெரும்பான்மை இன மக்களின் சமயமாகிய பௌத்த மதத்திற்கே அதிகாரபூர்வமாக முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது
பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் புத்த பெருமானுடைய சிலைகளை நிறுவுவதும், பௌத்த விகாரகைளை நிர்மாணிப்பதும் பௌத்த மதத்திற்கே உரிய தனித்துவமான உரிமையாகக் கருதப்படுகின்றது. அவ்வாறு புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் அமைக்கப்படும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் நியாயமான கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிஸார் இது தொடர்பான முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அத்தகைய முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத போக்கு காணப்படுகின்றது. ஓரிரு பொலிஸ் நிலையங்களில் அத்தகைய முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்ற அதேவேளை, இந்த அத்துமீறிய மதரீதியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கமும் அலட்டிக் கொள்வதில்லை.
தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்தர்கள் எவரும் நிரந்தரமாகக் குடியிருக்காத பிரதேசங்களில் நிறுவப்படுகின்ற புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் மத ரீதியான ஒரு சகிப்புத் தன்மைக்காகவே சிறுபான்மை இன மக்கள் ஏற்றுக்கொள்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் முகாம்களை அமைத்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தமது ஆன்மிக வழிபாட்டுக்காக நிரந்தரமாக புத்தர் சிலைகளையும் பௌத்த விகாரைகளையும் அமைத்திருந்தார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் அவ்விடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும்போது அகற்றப்படுவதில்லை.
அவ்வாறு அகற்றப்படாத புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் கவனிப்பாரின்றி காணப்படுவதுடன், பேரினவாத ஆக்கிரமிப்பின் அடையாளமாகவே மிஞ்சியிருக்கின்றன. யாரேனும் விஷமிகள் இந்த புத்தர் சிலையையோ அல்லது பௌத்த விகாரையையோ சேதமாக்கினால், அது பௌத்த மதத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாகப் பிரசாரப்படுத்தப்படுகி
இத்தகைய ஒரு சம்பவம் வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்தில் நடைபெற்றது. அங்கு படையினர் நிலைகொண்டிருந்த இடத்திற்கு அப்பால் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை அடையாளம் தெரியாத யாரோ சிதைத்துவிட்டார்கள்.
இந்தச் சம்பவம் மிக மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்திவிடுமே என்று அந்தப் பிரதேசத்தில் அந்த புத்தர் சிலை நிறுவப்பட்டிருந்த .இடத்திற்கு அப்பால் வசித்த ஊர் மக்கள் கவலையடைந்திருந்தார்கள். இந்த சிலை உடைப்பு சம்பவமானது திட்டமிட்ட ஒரு செயற்பாடாக இடம்பெறவில்லை. அதற்கு எந்தவிதமான அரசியல் பின்னணியோ, உள்நோக்கமோ எவருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்தச் சம்பவம் தென்னிலங்கையில் பௌத்த மதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மதவாத தாக்குதல் சம்பவமாக சித்தரிக்கப்பட்டிருந்
அந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்த பௌத்த மத குருக்கள் அடங்கிய குழுவினர், அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளின் உதவியோடு உள்ளூர் மக்களைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தினார்கள். அந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, அந்தச் சம்பவத்திற்கும் ஊர் மக்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டது. மதவாதத்தைத் தூண்டி இனக் கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக யாரோ விஷமிகள் வேண்டும் என்று செய்த ஒரு கைங்கரியம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. பௌத்த மதத்தின் மீது தங்களுக்கு எந்தவிதமான கோப தாபமோ வெறுப்போ கிடையாது என்பதை எடுத்துரைத்து, தாக்குதலுக்கு உள்ளாகிய அந்த இடத்தைப் பேணிப் பாதுகாப்பதாக ஊர்ப் பெரியவர்களும் இந்து மத முக்கியஸ்தர்களும் உறுதியளித்தார்கள். அதன் பின்னர், பௌத்தர்கள் எவருமே இல்லாத அந்த இடத்தில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாகப் புதிய புத்தர் சிலை பௌத்த மத முறைப்படி ஸ்தாபிக்கப்பட்டது.
அதனையடுத்து, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், இந்த புத்தர் சிலை உடைப்பு விடயம் பெரும் கலவரத்தை உருவாக்காத வகையில் அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதே என்று எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள்.
அதேநேரம் வடக்கிலும் கிழக்கிலும் இந்துக்களும் ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களும் வாழ்கின்ற பல இடங்களில் இந்துக் கோவில்கள் அமைந்துள்ள காணிகளிலும், ஏனைய பொது இடங்களிலும் பௌத்த விகாரைகள், பௌத்த மதத்தினரால் அத்துமீறிய வகையில் நிறுவப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பல இடங்களில் புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.
பௌத்த துறவிகளின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் பாதித்து, மத ரீதியான வெறுப்புணர்வையூட்டுவதற்
இத்தகைய மத ரீதியான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் கவனத்திற்குப் பல தடவைகள் கொண்டு வந்துள்ளபோதிலும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்திருக்கின்றது.
இது மட்டுமல்ல. பொதுபல சேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பின் செயலாளராகிய கலகொட அத்தே ஞானசார தேரர் வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு எதிராக மதரீதியான வெறுப்பூட்டும் பிரசாரங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். அத்துமீறிய அவருடைய பிரசார செயற்பாடுகளினாலும், முஸ்லிம் மதத்தை மலினப்படுத்தும் வகையிலான நிந்தனை செய்யும் கருத்துக்களினாலும் முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள்.
மதம் பிடித்தது போன்ற ஞானசாரருடைய மதவாத நிந்தனை கருத்துக்களும், முஸ்லிம் குடியிருப்புக்களில் பள்ளிவாசல்களுக்கு அவருடைய சகாக்கள் சென்று தாக்குதல் நடத்திய நடவடிக்கைகளும் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்திருந்தன. களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம, தர்கா நகர், பேருவளை ஆகிய இடங்களில் 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம், 17 ஆம் திகதி வரையிலான தினங்களில் சிங்கள பௌத்த தீவிரவாத குழுவினர் முஸ்லிம்கள் மீதும், அவர்களுடைய வீடுகள் வர்த்தக நிலையங்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியிருந்தது.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறையின் போது நான்கு பேர் உயிரிழந்தார்கள். எண்பது பேர் வரையில் காயமடைந்தார்கள். பத்தாயிரம் பேர் இடம்பெயர நேர்ந்தது. இடம்பெயர்ந்தவர்களில் இரண்டாயிரம் பேர் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பிரதான ஊடகங்களில் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் முழு அளவில் வெளிவரக்கூடாது என்று அன்றைய அரசாங்கம் எச்சரிக்கை செய்திருந்தது என்பதும் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய பேரணி மற்றும் மத நிந்தனை கருத்துக்களே இந்த வன்முறைக்குத் தூபமிட்டிருந்தன என்று கண்டறியப்பட்டிருந்த போதிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து வன்முறையைத் தூண்டி விட்டமைக்காக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும் இன வெறுப்பு கருத்து வெளியீட்டுப் பிரசார நடவடிக்கைகளும் அத்துடன நின்றுவிடவில்லை. ஆட்சி முறையில் 2015 ஆம் ஆண்டு மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சிறிது காலம் அமைதியாக இருந்த பொதுபல சேனா அமைப்பினர் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் மீண்டும் சுறுசுறுப்படைந்தனர். கிழக்கு மாகாணத்திலும் ஏனைய தென்பகுதி மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இனந்தெரியாத வகையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்குத் தீயிடப்பட்டன.
இந்த நடவடிக்கைகளுக்கு ஞானசார தேரரின் மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்து வெளிப்பாடும், அவருடைய தலைமையிலான குழுவினரது செயற்பாடுகளுமே காரணம் என தகவல்கள் வெளியாகிய போதிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனது கரங்களை நீட்டவில்லை.
கிழக்கில் இறக்காமம், பொலன்னறுவை மற்றும் குருணாகல் போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை தாக்குதல் சம்பவங்களில் ஞானசார தேரர் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததா
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரவலான தாக்குதல்கள் வர்த்தக நிலையங்கள் தீயிடப்பட்ட சம்பவங்கள் என்பன நாட்டில் இன, மத ஐக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன என்பது பலராலும் அரசாங்கத்திற்கு உணர்த்தப்பட்டது. இந்த அமைதியின்மை நிலைமையானது நாட்டிற்குள் பலராலும் கண்டிக்கப்பட்டது. அதேபோன்று சர்வதேச மட்டத்திலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டன.
இதன் பிந்திய நிலைமையாக, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறினால், இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையானது மீண்டும் பரிபோக நேரிடலாம் என்று இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
இனக்குழுமங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது ஐ.நா. சாசனங்களில் ஒன்றாகும். அதனை ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இலங்கை வாக்குறுதியளித்துள்ளது. ஐ.நா. சாசனங்களை நிறைவேற்றுவது தொடர்பில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். அதனைக் கடைப்பிடிக்கத் தவறினால் ஜீ.எஸ்.பி. சலுகை நிறுத்தப்படக் கூடும் என்பது தெளிவாக அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டிருப்
முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பில் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். ஜிஎஸ்பி வரிச்சலுகை என்பது ஒரு சலுகை. அதனை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆயினும் ஐ.நா. சாசனங்களை நிறைவேற்றத் தவறினால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களானது நவீன பயங்கரவாதமாகவே அவதானிகளினால் நோக்கப்படுகின்றது. பிரஜை ஒருவர் தான் விரும்பிய ஒரு கொள்கையை, மத நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கும் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரித்துடையவராவார். இது ஒருவருடைய உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படைய உரிமையாகும். இந்த உரிமை இலங்கையின் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
அவ்வாறு உறுதி செய்யப்பட்ட உரிமையை மறுக்கும் வகையில் செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செயற்படுவதும், அதற்காக (வன்முறையை) பலத்தைப் பிரயோகிப்பதும், அதன் ஊடாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிப்பதும் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கி
முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டு
சிங்கள ராவய, ராவணா பலய, மகாசன் பலய, சிங்கள ஜாதிக பலய, சிங்களே போன்ற பல்வேறு சிங்களத் தேசப்பற்றாளர் அமைப்புக்களான சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களை உள்ளடக்கியதே பொதுபல சேனா அமைப்பாகும். இந்த அமைப்பைச்சேர்ந்த பல்வேறு குழுவினர் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதம் என்பவற்றுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கடந்த அரசாங்க காலத்தில் உருவாக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பானது, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வன்முறை போக்கை அரசாங்கம் சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், நாளடைவில் அவர்களுடைய செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும் திசை மாறக்கூடும். அவ்வாறு திசை மாறும்போது அது சர்வதேச வரைமுறைக்கு அமைய பயங்கரவாதச் செயற்பாடாக நிச்சயம் மாற்றமடையும். அது சர்வதேச அளவிலான பயங்கரவாதமாகக் கணிக்கப்படக் கூடிய ஆபத்தும் உள்ளது.
ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஞானசார தேரர் தேடப்பட்டு வருகின்றார். வன்முறைகளுக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் தேடப்படுகின்ற அவரைக் கைது செய்வதற்கு பொலிசார் பின்வாங்கியிருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய நான்கு பொலிஸ் குழுக்கள் தலைமறைவாகியுள்ள ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் களமிறக்கப்பட்டிருக்கின்
அமைச்சரவையின் இணைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, தலைமறைவாகியுள்ள ஞானசார தேரர், அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருக்கக் கூடும். அதன் காரணமாகவே அவரைக் கைது செய்ய முடியாதிருக்கின்றதோ என்று சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார். பௌத்த பிக்கு ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸாரினால் இயலாமல் இருப்பது குறித்து அமைச்சர் ஒருவர் அரசாங்கத் தரப்பில் இருந்து இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
அதேவேளை, பொலிஸார் தமது கடமையைச் செய்யாவிட்டால், இராணுவத்தை அழைக்க வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுவும் வேடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்ற ஜனாதியதி பொலிஸாருக்கு இறுக்கமாக உத்தரவிடுவாரேயானால், அதனை அவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள். ஒருவரைக் கைது செய்வதென்பது சிவில் நிர்வாகத்தில் பொலிஸாரின் கடமையாகும். அதனை அவர்கள் எந்த வகையிலும் நிறைவேற்றுவார்கள்.
ஆனால் ஞானசார தேரரைக் கைது செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதமும், கூறப்படுகின்ற காரணங்களும் அரசாங்கம் இந்த விடயத்தை சுய அரசியல் நோக்கம் ஒன்றின் அடிப்படையில் கையாள்கின்றதோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல், சிங்கள மக்களும் நம்பிக்கை இழந்து வருகின்ற ஒரு சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதான ஒரு போக்கும் காணப்படுகின்றது.
இந்த நிலையில் தீவிரவாத போக்கில் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்ற மஹிந்த ராஜபக் ஷவின் செயற்பாடுகளை முடக்குவதற்காகவே ஞானசார தேரரைக் கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது என்ற கருத்தும் வெளிப்பட்டிருக்கின்றது.
எது எப்படியானாலும் நவீன பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு சுட்டிக்காட்டத்தக்க வகையிலான வன்முறைச் செயற்பாடுகளுக்கு பௌத்த மத குரு ஒருவரின் தலைமையில் பௌத்த மத தீவிரவாத அமைப்புக்களின் போக்குக்கு ஆட்சியாளர்கள் வளைந்து கொடுப்பது என்பது நல்லாட்சி அரசாங்கத்தையும் நாட்டையும் எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களில் கொண்டு விடுவதற்கான ஒரு வழிமுறையாகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இந்த நிலைமையில் இருந்து நாட்டை சரியான வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டியது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மிக முக்கியமான பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் உடனடியாக முன்வர வேண்டும்.