ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக முறைப்பாடு செய்ய உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் படையதிகாரியுமான ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைவர் Joaquín Martelli இடம் இந்த முறைப்பாடு ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரை விடவும் அதன் தலைவர் வலுவானவர் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையின் இறைமையை பாதிக்கும் வகையில் இலங்கையின் உள் விவகாரங்களில் அல் ஹூசெய்ன் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தி முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமென சயிட் அல் ஹூசெய்ன் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ள சரத் வீரசேகர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான நல்லிணக்க பொறிமுறைமை குறித்த நிறுவனத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
உள்ளக விசாரணைப் பொறிமுறைமை பொருத்தமற்றது எனவும் கலப்பு நீதிமன்றம் அவசியமானது எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சரத் வீரசேகர தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு சென்று அல் ஹூசெய்னுக்கு எதிராக முறைப்பாடு செய்ய உள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 35ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்தப் பிரதிநிதிகள் ஜெனீவா செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.