பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயமிருக்கின்றது என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலாந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.
சிறைக்குள் செல்வதற்கோ, காவல்;நிலையம் போவதற்கோ ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் அச்சப்படவில்லை எனவும் அநீதி இழைக்கப்பட்டிருப்பின் சிறைவாசம் செல்வதற்கு ஆயிரக்கணக்கான பிக்குகளும், இளைஞர்களும் தயார் நிலையிலேயே இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகாமைக்குரிய காரணங்கள் நீதிமன்றத்தில் தமது சட்டத்தரணியால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என காவல்துறை அதிபரிடம் கடந்த 24ஆம் திகதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நேரத்தில் அவருக்கு சுகவீனமும் ஏற்பட்டுள்ளது எனவும் இது திடீரென ஏற்பட்ட நோய் இல்லை எனவும் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் டிலாந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.
சுகயீன நேரத்திலும் தன் இனத்துக்காக அவர் குரல் கொடுத்து வருகின்றார் எனவும் ஐ.எஸ். அமைப்பின் ஊடாக ஞானசார தேரரைக் கொலை செய்யும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் எனவே, ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால் நாட்டில் இரத்தஆறு ஓடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.