வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண சபையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதிப்பதற்கான, வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே அமைச்சர்கள் அனைவரும் நிராகரித்த நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிட இன்று விசேட அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இடம்பெறும், விவாதங்களை தொடர்ந்து முதலமைச்சர் தனது இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு மாகாண அமைச்சரவையே பொறுப்புக்கூற வேண்டுமென இன்று (புதன்கிழமை 14.06.17) நடைபெறும் விசேட அமர்வில் உரையாற்றிய குருகுலராசா தெரிவித்துள்ளார்.
தமது அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் யாவும் அமைச்சரவையின் முடிவுக்கு இணங்கவே செயற்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட குருகுலராசா, தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் யாவும் கூட்டுப்பொறுப்புள்ள குற்றச்சாட்டுக்கள் எனவும் அமைச்சரவைக்கும் அதில் பொறுப்புண்டு எனவும் தெரிவித்த அவர், தனது தினம் தன்னிலை விளக்கத்தை எழுத்து மூலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கையளித்துள்ளதால் சபையில் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.