தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இடம்பெறவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், குடோன்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அரிசி மாதிரிகளை நுண்ணுயிரியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்று தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் மற்றும் ஐதராபாத்தின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்தமையினைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.
இதையடுத்து தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை மற்றும் உணவு வழங்கல் துறையினர் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.