குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிர்வாகம் ஒழுக்காற்று விசாரணை நடத்த உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியுள்ள மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு ஒழுக்கவிதிகள் மீறப்பட்டமை குறித்து விளக்கம் அளிப்பதற்கு மஹிந்த உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அழைக்கப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியையும் கட்சியின் தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியாக விமர்சனம் செய்தல், சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து கொண்டு பொதுமக்கள் முன்னணி கட்சியின் சார்பில் கடமையாற்றுதல், மத்திய செயற்குழு தீர்மானங்களுக்கு சவால் விடுத்தல், கட்சியை விமர்சனம் செய்தல், மே தினக் கூட்டத்தில் பங்கேற்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கட்சியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் நிசாந்த தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்தால் கட்சியின் உறுப்புரிமையை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.