181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண அவைத்தலைவர், நம்பிக்கையில்லா பிரேரணையை , வடமாகாண ஆளுனரிடம் கையளித்தது சட்டத்திற்கு புறம்பான செயல் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் தனது இல்லத்தில் திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அவைத்தலைவரின் பங்கு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெளிவில்லாமல் இருக்கின்றது. அவையில் ஒரு அமைச்சருக்கு எதிராகவோ முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக இருந்தால் , அதனை அவைத்தலைவருக்கு தான் கையளிக்க வேண்டும்.
இங்கே அவைத்தலைவர் தானாக முன் வந்து தன் பக்கம் சிலரை இழுத்துக்கொண்டு , ஆளுனரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்து உள்ளார். அவரது அந்த செயல் சட்டத்திற்கு புறம்பானது என்றே நம்புகின்றேன்.
அவ்வாறு பக்க சார்பாக நடந்து கொண்ட அவைத்தலைவர் தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்கலாமா என்ற கேள்வி எழுகின்றது. அதனை உறுப்பினர்கள் பேச இருக்கின்றார்கள் விவாதிக்க இருக்கின்றார்கள் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றேன்.
அமைச்சர்களின் விடுமுறை கோரிக்கையை கைவிடுகிறேன்.
அமைச்சர்களின் விடுமுறை கோரிக்கையை நான் கைவிடுவதாக தெரிவித்ததை அடுத்து இந்த நிலைமை சுமூகமாக வந்துள்ளதாக நம்புகின்றோம்.
ஆனால் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும். அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் திணைக்களங்கள் அமைச்சுக்களில் இருக்கின்றார்கள் அவர்கள் தங்களுடைய சாட்சியங்களை அளிப்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
அவர்கள் சாட்சியங்கள் அளிப்பதற்கான சூழ்நிலைகள் இருக்க வேண்டும் இவற்றை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கின்றோம்.
புதிய அமைச்சர்கள் தொடர்பில் முடிவில்லை.
பதவி விலக கோரிய அமைச்சர்களின் இடத்திற்கு வேறு அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் தீர்மானிக்க வில்லை. தற்போது உள்ள நிலைமையினை ஸ்திர படுத்திய பின்னரே அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க முடியும்.
அமைச்சர்கள் மீது விசாரணை நடத்திய குழு சட்ட ரீதியானது.
அமைச்சர்களை விசாரணை செய்த குழு சட்ட பூர்வமான குழு தான் அதேநேரம் இப்பொழுது மற்றைய இரு அமைச்சர்கள் மீதான விசாரணைகளை செய்ய வேண்டியது வேறு ஒரு குழு ஏனெனில் , இந்த அமைச்சர்களின் விசாரணைகளில் வேறு விதமான பின்னணி இருப்பவர்கள் பங்கு பற்ற வேண்டிய காரணம் இருப்பதனால் , அதனை மாற்றி அமைக்க இருக்கின்றோம்.
விவசாய அமைச்சு தொடர்பில் மீளாய்வு செய்வது தொடர்பில் பரிசீலனை.
விசாரணை அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்ய முடியுமா? என பரிசீலிக்கிறேன். ஏனெனில் அவர் கூறுவதில் சில விடயங்கள் இருக்கின்றன அந்த விசாரணை குழு கண்டு பிடித்தது அமைச்சர் அதிகார துஸ்பிரயோகம் செய்தார் என்றும் , பண விரயத்தில் ஈடுபட்டு இருந்தார் என்றும் ஆனால் கையாடல் செய்தார் என எங்கும் குறிப்பிடப்பட்டு இருக்க வில்லை அந்த அடிப்படையில் சில விடயங்களை மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது.
கல்வி அமைச்சர் இராஜினாமா கடிதத்தை கையளிக்கவில்லை.
கல்வி அமைச்சர் தன்னுடைய இராஜினாமா கடிதத்தை தருவதாக தொலைபேசியில் குறிப்பிட்டு இருந்தார். இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. கிடைக்கும் என நம்புகின்றேன். என தெரிவித்தார்.
அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டு தொடர்பில் விசாரணை செய்த குழுவினர் விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை பதவி விலக வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
அது தொடர்பில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வில் முதலமைச்சர் இரு அமைச்சர்களும் தங்கள் பதவிகளை தியாகம் செய்ய முன் வரவேண்டும் எனவும் , அவர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை நாளை (15ஆம் திகதி ) தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரி இருந்தார்.
அதற்கு இணங்க மறுநாள் (15ஆம் திகதி) விவசாய அமைச்சர் பொ.இங்கரநேசன் தனது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்து இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love