குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கணவன் மனைவி உட்பட நால்வர் கோப்பாய் பொலிசாரினால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இருபாலை பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு வீடு புகுந்த இருவர் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் மஞ்சுள காந்தோல தலைமையிலான எட்டு போலிஸ் உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் போது குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமரா (ஊஊவுஏ) ஒளிப்பதிவுகளை பரிசோதித்தான் அடிப்படையில் அரியாலை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை யாழ். நகர் பகுதியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட போது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை விற்ற பணத்தில் கொழும்பில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்திற்கு சென்று சிறுவர்களுக்கான பொம்மைகள் , விளையாட்டு பொருட்கள் மற்றும் உடுபுடவைகள் என சுமார் ஒன்றரை இலட்ச ரூபாய்க்கு பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.
அத்துடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கொள்வனவு செய்துள்ளார்கள். அத்துடன் கொள்ளையடிக்கபப்ட்ட நகைகளில் 5 பவுனை உருக்கி தங்க கட்டிகள் ஆகியுள்ளனர். மற்றும் 96 ஆயிரத்து 190 ரூபாய் பணத்தினை ரொக்க பணமாகவும் வைத்து இருந்துள்ளமை விசாரணைகள் ஊடாக போலீசார் கண்டறிந்தனர்.
அதனை அடுத்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கபப்ட்ட பணத்தில் வாங்கபப்ட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
அத்துடன் கொள்ளை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரின் மனைவி குறித்த கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றசாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி தங்க கட்டியாக்கி கொடுத்த குற்ற சாட்டில் யாழ்.நகர் பகுதியை சேர்ந்த நகை தொழிலாளி ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு உள்ள சந்தேக நபர்கள் நால்வரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ள அதேவேளை கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மன்றில் சமர்ப்பிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.