குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த பிக்குகளை எவரும் இழிவுபடுத்தக் கூடாது என அஸ்கிரி பீடம் தெரிவித்துள்ளது. அஸ்கீரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் கடுமையான தொனியில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் அனைத்து பீடங்களின் மாநாயக்க தேரர்களும், தேசப்பற்றுடையவர்களும் இந்த அழுத்தங்களை எதிர்நோக்க ஆயத்தமாக வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பௌத்தர்கள் ஏனைய மதங்களை மதிப்பவர்கள் என குறிப்பிட்டுள்ள அவர் பொதுபல சேன இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் மோசமாக திட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய தொனி சற்றே கடுமையான போதிலும் அவர் ஓர் பௌத்த பிக்கு என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஞானரதன தேரர் வலிறுத்தியுள்ளார்.
ஞானசார தேரரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஞானசார தேரரின் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் நியாயமான கோணத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஞானசார என வெறுமனே சிலர் அவரை விளிப்பதாகவும் சிரேஸ்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு மட்டுமே தமது இளைய பௌத்த பிக்கு ஒருவரை பெயர் சொல்லி அழைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.