குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரின் எச்சரிக்கையை அடுத்து அழிக்கப்பட்டு்ளளது.
இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது
கடந்த சனிக்கிழமை(17) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் உலக தமிழ்ச் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவா் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது.
திருவள்ளுவரின் திருக்குறல் உலக பொது மறை என்பதனால் திருவள்ளுவரின் சிலையை உலகத்தின் மீது இருப்பது போன்று சிலை தாங்கியை வடிவமைக்க கிளிநொச்சி தமிழ்ச் சங்கம் தீர்மானித்து அதன்படி உலக நாடுகள், கண்டங்கள், சமூத்திரங்கள் பெயர்கள் எழுதப்பட்டு சிலை தாங்கியும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் இலங்கையை அதன் மற்றொரு பெயரான ஈழம் என எழுதப்பட்டு அடைப்புக்குறிக்குள் இலங்கை என எழதப்பட்டிருந்தது.
இதுவே பயங்கரவாத தடுப்பு பிரிவினரிக்கு சர்ச்சையாக காணப்பட்டது. அதனால் நேற்று செவ்வாய்க் கிழமை கொழும்பில் இருந்து சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சிலையை அமைப்பதற்கு சபையின் வளாகத்தில் அனுமதி வழங்கிய கரைச்சி பிரதேச சபையின் செயலாரை சென்று விசாரித்துள்ளதோடு, குறித்த ஈழம் எனும் சொல் இனமுரப்பாட்டை, பிரிவினையை ஏற்படுத்தும் சொல் எனவும் தனிநாட்டை பிரதிபலிக்கிறது என்றும் எனவே அந்தச் சொல்லை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்து, திருவள்ளுவா் சிலையின் சிலைதாங்கியில் உள்ள ஈழம் எனும் சொல்லை அழித்துவிடுமாறும் தெரிவித்துச் சென்றுள்ளனா்.
இதனையடுத்து பிரதேச சபை செயலலாளர் கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் தலைவா் இறைபிள்ளையை தொடர்பு கொண்டு ஈழம் எனும் சொல்லை அழித்து விடுமாறு தெரிவித்துள்ளா், அதன்படி இன்று புதன் கிழமை காலை ஏழு மணியளவில் உலக வடிவில் அமைக்கப்பட்ட சிலை தாங்கியில் இலங்கை மீது எழுதப்பட்டிருந்த ஈழம் அழிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடவிதானங்களில் கூட இலங்கையின் மறுபெயர்களில் ஒன்றாக ஈழம் குறிப்பிடப்பட்டு்ளளது. அத்தோடு காரைநகா் சிவன் கோவிலை ஈழத்துச் சிதரம்பரம் என்றே அழைக்கின்றார்கள், தேவாரங்கள், காப்பியங்கள் முதல் பல்வேறு சமய மற்றும் இலக்கியங்களில் ஈழம் என்ற சொல் தொன்று தொட்டு குறிப்பிடபட்டு வருகிறது.
இதனைதவிர தற்போது வடக்கில் ஈழம், தமிழீழம் எனும் சொற்களுடன் ஆரம்பிக்கப்படுகின்ற பல அரசியல் கட்சிகள் சட்ட ரீதியாக இயங்கி வருகிறன. இந்த நிலையில் திருவள்ளுவா் சிலையில் உள்ள பீடத்தில் இலங்கைக்கு எழுதப்பட்ட ஈழத்தை அழிக்க அறிவித்த பயங்கரவாத பிரிவினரையும் அதனை கேட்டு உடனடியாக அழித்த தமிழ்ச் சங்கத்தின் மீது மக்கள் விசனம் அடைந்துள்ளனா்.