குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களிடமே பொலிஸ் நற்சான்றிதழ் (கிளியரன்ஸ்) கேட்கப்படாதபோது நகை அடகு பிடிப்பவருக்கு ஏன் நற்சான்றிதழ் என சபையில் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார்.
வடமாகாண சபையில் 97ஆவது அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. அதன் போது நகை அடகு தொடர்பிலான நியதி சட்ட விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா , நகை அடகு பிடிப்பவர்களுக்கு போலிஸ் கிளியரன்ஸ் தேவை என கோருவோம் என்றார்.
அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , தேர்தலில் போட்டியிடும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களிடமே போலிஸ் கிளியரன்ஸ் கேட்பதில்லை. நகை அடகு பிடிப்பவர்களுக்கு எதற்கு கிளியரன்ஸ் ? பொலிஸ் கிளியரன்ஸ் எடுக்க வேண்டும் என கோரினால் பொலீசார் இலஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே அது தேவையற்றது என தெரிவித்தார்.