வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தினால் வடக்கு போசனையாளர்கள், உளளசமூக உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த வாரம் (13.06) மாகாண சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் சுகாதார அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது 9 உளசமூக உத்தியோகத்தர்களுக்கும், 4 போசனையாளர்களுக்கும் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவர்கள் முறையே மாவட்ட வைத்தியசாலைகளிலும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளிலும்; கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சத்தியலிங்கம் போருக்கு பின்னரான சூழ்நிலையில் மக்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உளநல ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்கவேண்டிய தேவையுள்ளது. அதேபோன்று யுத்தகாலத்தில் நிலவிய பொருளாதார தடைகள் மற்றும் உணவுப்பற்றாக்குறைகள் காரணமாக மாகாணத்தில் போசனைக்குறைபாடும் நிலவுகின்றது. குறிப்பாக போசனைக்குறைபாடுடைய சிறார்கள் எமது மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறான பிரச்சனைகளை ஓரளவேனும் தீர்த்துவைக்கும் முகமாகவே இவ்வாறான நியமனங்கள் வழங்கிவைக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்க சிறந்த சேவையினை வழங்க அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், உதவிச் செயலாளர் சுஜீவா, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் மற்றும் பிரதம கணக்காளர் கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.