Home இலங்கை இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும் – சமுத்திரன்

இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும் – சமுத்திரன்

by admin

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார விருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு பற்றி நீண்ட காலமாக விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. தமிழ் சமூகத்தினுள் நடைபெறும் இந்த விவாதங்கள் எல்லாமே எழுத்து வடிவம் பெறுவதில்லை. பொதுவாக வெளிநாடுகளில் இவை கருத்தரங்குகளிலும் ஈழத்தமிழர்கள் கூடும் மற்றைய நிகழ்ச்சிகளிலும் இடம்பெறுவதைக் காணலாம். 2009 ஐந்தாம் மாதம் இராணுவரீதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின் இந்த விடயம் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த தமிழரின் பங்கு எனும் வடிவத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்போது ராஜபக்ச அரசாங்கம் அகங்காரத்துடன் தேசிய இனப் பிரச்சனை என ஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே அது தீர்க்கப்பட்டுவிட்டது இனிச் செய்யவேண்டியது வடக்கு கிழக்கின் அபிவிருத்தியே எனும் கொள்கையைப் பின் பற்றியது. நடைமுறையில் அந்த அரசாங்கம் போருக்குப்பின் மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத் தொடர்ந்தது. அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமின்றி அபிவிருத்தியை முன்வைத்தது. அரசியல் தீர்வுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கும் நெருங்கிய உறவுண்டு ஆனால் பின்னையது முன்னையதின் பிரதியீடாகாது எனும் கருத்தினை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அத்துடன் ராஜபக்ச ஆட்சி வடக்கு கிழக்கின் ‘அபிவிருத்தி’யை இராணுவ மயப்படுத்தி அடக்குமுறையின் கருவியாகப் பயன்படுத்தியது. இது போருக்குப்பின் அது மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத் தொடரும் கொள்கையின் ஒரு அம்சமாகியது. இது பற்றி ஒரு விரிவான கட்டுரையையும் எழுதியுள்ளேன். புலிகள் மீண்டும் அணிதிரள முற்படுகிறார்கள் என்றும் அதனால் தேசிய இறைமைக்கு ஆபத்து தொடர்கிறது என்றும் பிரச்சாரங்கள் செய்து இராணுவத்தை வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நிலைகொள்வதை நியாயப்படுத்தியது அரசாங்கம். ராஜபக்ச ஆட்சியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் திட்டங்களைச் செயற்படுத்துவதற்குப் பலவிதமான கட்டுப் பாடுகளும் தடைகளும் இருந்தன. இதனால் தனிப்பட்ட காசாதார உதவிகளுக்கு அப்பால் திட்டமிட்ட சமூக மேம்பாட்டுக்கு உதவும் செயற்பாடுகள் குறைவாகவே இருந்தன. அடக்குமுறையின் விளைவான பயமும் நிச்சயமின்மையும் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் முன்னெடுப்புக்களுக்குப் பெரும் தடைகளாயின.

2015ல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்குப்பின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தவர்  மத்தியில் மேலும் அதிகமான முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதைக் காணமுடிகிறது. அரசாங்கம் ‘தமிழ் டயஸ்போறா’வை வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் பங்காளர்களாகும்படி அழைத்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அப்போதைய ஆட்சிக்கு எதிரான சிங்கள மக்களுடன் சேர்ந்து  அவர்கள் வழங்கிய பெரும் ஆதரவின்றி ஆட்சி மாற்றம் இடம் பெற்றிருக்கவே முடியாது. ஆட்சி மாற்றத்தின்பின் சில விடயங்களைப் பொறுத்தவரை சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. விசேடமாகப் பேச்சுச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், இனவாதங்களுக்கு எதிராக மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிவில் சமூக அமைப்புகளின் சுதந்திரம், மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர் இலங்கைக்குப் பிரயாணம் செய்வது, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டங்களைச் செயற்படுத்துவது போன்றவற்றில் காணக்கூடிய முன்னேற்றங்களைக் குறிப்பிடலாம். அதேபோன்று யாப்பின் 19வது திருத்தமும் வரவேற்கப்படவேண்டியதே. மறுபுறம் பல்வேறு வகையில் ஆட்சிமாற்றம் ஏமாற்றங்களையே கொடுத்துள்ளது. தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வுபற்றிப் பேசப்படுகிறது ஆனால் தெளிவாகத் தென்படும் முன்னேற்றம் இல்லை. புதிய யாப்புத் தொடர்பான செயற்பாடுகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கை அரசின் அமைப்பில் அடிப்படையான சீர்திருத்தமின்றி தேசிய இனப் பிரச்சனைக்கு ஜனநாயகரீதியான தீர்வினைக் காணமுடியாது. இதைச்செய்யும் அரசியல் திடசித்தம் அரசாங்கத்திற்கு இருக்கிறதா?

இன்னொரு மட்டத்தில் பார்த்தால் இராணுவம் நீண்டகாலமாகக் கைப்பற்றி வைத்திருக்கும் தனியார் நிலங்களைக்கூட இதுவரை அரசாங்கத்தினால் முழுமையாக விடுவிக்க முடியவில்லை. வடக்கு கிழக்கின் இராணுவ மயமாக்கலைப் பொதுமக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் குறைக்கக் கூட முடியவில்லை. தெற்கிலே தலைவிரித்தாடும் பேரினவாத சக்திகளைத் துணிகரமாக எதிர்க்க முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கிறது. போர்க்குற்றம் தொடர்பாக அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரண்படும் கொள்கையையே நாட்டில் பின்பற்றுகிறது.

ஊழல் தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதியின் ஒரு அற்ப பகுதியையாயினும் நிறைவேற்றமுடியாமை மட்டுமன்றி தனது ஆட்சிக்குள்ளேயே வளரும் ஊழலைக் கூடத் தடுக்கமுடியாமை ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் பயங்கரமான பலவீனத்தையே வெளிக்காட்டுகின்றது. சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கம் மீதான ஏமாற்றமும் எதிர்ப்பும் வலுவடைந்துள்ளன. ஏறிச்செல்லும் வாழ்க்கைச் செலவினால் சகல இன மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆட்சிமாற்றத்திற்கு அயராது உழைத்த சிவில் சமூக அமைப்புக்கள் தமது ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் தொடர்ச்சியாகப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றன. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தெளிவற்றதாக இருக்கும் அதேவேளை நடைமுறையில் பழைய கொள்கையே தொடர்கிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து வளர்கின்றன. புவியியல்ரீதியில் பொருளாதார வளர்ச்சி மிகவும் அசமத்துவமான போக்கிலேயே தொடர்கிறது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி (2015) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP ல்) 40 வீதத்திற்கும் மேலான பங்கு மேல்மாகாணத்தில் இடம்பெறுகிறது. மிகுதி எட்டு மாகாணங்களில் தென், மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களும் கூட்டாக 30 வீதத்தைப் பெறுகின்றன (தலா 10%) . எஞ்சிய மாகாணங்களில் வடமாகாணம் நாட்டிலேயே ஆகக்குறைந்த மூன்று வீதத்தையும், அதற்கு அடுத்தநிலையில் ஊவா மாகாணம் ஐந்து வீதத்தையும் அடுத்து கிழக்கு மாகாணம் ஆறு வீதத்தையும் பெறுகின்றன.  இந்தப் போக்கு நீண்ட காலமாக இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிடவேண்டும். இன்றைய சூழலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சமூக, பொருளாதாரரீதியில் இலங்கையின் மிகப் பின்தங்கிய மாகாணங்களில் அடங்குகின்றன. அத்துடன் நீண்ட போரின் விளைவாக இந்த மாகாணங்கள் விசேட பிரச்சனைகளைக் கொண்டுள்ளன.

1977ல் UNP ஆட்சி அறிமுகம் செய்த பொருளாதாரக் கொள்கையே பல முரண்பாடுகளுடன் இன்றுவரை தொடர்கிறது. சென்ற நான்கு தசாப்தங்களில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிபெற்று இன்று இலங்கை கீழ்நடுத்தர வருமான நாடெனும் அந்தஸ்தினைப் பெற்றுள்ளது. ஆயினும் இதுவரையிலான பொருளாதார வளர்ச்சி மிக அற்ப தொழில் வாய்ப்புக்களையே கொடுத்துள்ளது. நாட்டின் தொழிற்படையின் 20-25 வீதத்தினர் வெளிநாடுகளிலேயே வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் மத்தியகிழக்கில் தொழில் செய்கிறார்கள். அதில் ஏறக்குறைய அரைவாசியினர் பெண்கள். இவர்களில் 80 வீதத்திற்கும் மேலானோர் வீட்டுப்பணிப் பெண்கள். வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு உதவுவதற்கென்றே ஒரு அமைச்சு இலங்கையில் இயங்குகிறது. வெளிநாடுகளில் தொழில்செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணமே நாட்டின் பிரதான அந்நிய செலாவணி வருமானங்களில் ஒன்றாகும். ராஜபக்ச ஆட்சியில் குவிந்த கடன் சுமையைக் கையாள்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கும் இன்றைய அரசாங்கம் நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. கடன் பொறியிலிருந்து மீளும் நோக்கில் சர்வதேச நிதியத்திடம் சரணடைந்துள்ளது.  மறுபுறம் எதிர்பார்த்த அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை. நிதிமயமாக்கல் (financialization) மேலாட்சி செய்யும் இன்றைய உலகப் பொருளாதாரத்தில் இலங்கை போன்ற ஒரு நாடு உற்பத்தி மூலதனத்தைக் கவருவது சுலபமல்ல. வேறு பல நாடுகளுடன் போட்டி போடும் நிலையிலேயே இலங்கை உள்ளது.

இத்தகைய சூழலில் அரசாங்கம் புலம் பெயர்ந்து மேற்குநாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்களை வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக வரும்படி அழைப்பு விடுத்து அதற்கும் அப்பால் சில செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. தமிழ் டயஸ்போறாவிடமிருந்து முதலீடுகளையும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பரீதியான பங்களிப்புக்களையும் எதிர்பார்க்கிறது. இந்த அழைப்புப்பற்றிப் பார்க்கமுன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமிடையிலான தொடர்புகள் பற்றி மற்றும் வடக்கு கிழக்கு நிலைமைகள் பற்றிச் சில விடயங்களை நினைவுகூர்தல் பயன் தருமென நம்புகிறேன்.

வெளிநாடுகளில் (விசேடமாக மேற்கு நாடுகளில்) வாழும் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தவர்க்கும் தாயகத்திலுள்ள அவர்களின் உறவுகளுக்குமிடையே பன்முகத் தன்மை கொண்ட தொடர்புகள் இருப்பதும் காலப்போக்கில் இவை ஒரு நாடுகளைக் கடந்த சமூகத்தின் (transnational community) உருவாக்கத்திற்கு வழிவகுத்ததும் பலரும் அறிந்த விடயமாகும். இலங்கையில் வாழும் வடக்கு கிழக்குத் தமிழ் சமூகத்தில் ஒரு காசாதாரப் பொருளாதாரம் உருவாகியுள்ளதும் யாவரும் அறிந்ததே. போர்க் காலத்தில் நாட்டிலே பாதிக்கப்பட்டோரில் கணிசமான பகுதியினர் வெளிநாட்டிலிருந்து சென்ற பண உதவியால் காப்பாற்றப்பட்டனர். ஆனால் காசாதாரப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வடக்கு கிழக்கின் பொருளாதார விருத்திக்குப் பெருமளவில் உதவவில்லை. வெளிநாட்டிலிருந்து செல்லும் காசாதாரம் சமூக மேம்பாட்டிற்கு உதவும் அபிவிருத்திப் போக்கிற்கு உதவுமா இல்லையா என்பது உள்நாட்டு நிலைமைகளிலேயே தங்கியுள்ளது என பல சர்வதேச ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அத்தகைய அபிவிருத்திக்கு உதவும் கொள்கை மற்றும் நிறுவனரீதியான சூழல் இருக்கவில்லை என்பதே உண்மை. வெளிநாட்டுக் காசாதாரம் அங்கு உற்பத்தி மூலதனத்தின் வளர்ச்சிக்கு உதவியதையும் விடப் பெருமளவில் ஒரு நுகர்வுவாதக் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கே உதவியுள்ளது. மறுபுறம் வெளிநாட்டுக் காசாதாரம் பெருமளவில் கோவில்களைப் புனரமைக்கவும் விஸ்தரிக்கவும் புதிய கோவில்களைக் கட்டவும் பயன்பட்டுள்ளன தொடர்ந்தும் பயன்படுகின்றன.

இன்றைய வட மாகாணத்தின் அரசியல் ஒரு குழம்பிய குட்டைபோல் தெரிகிறது. மூன்றரை வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) ஆட்சியிலிருக்கும் வட மாகாணசபையிடம் மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்பட்ட ஒரு அபிவிருத்தித் திட்டம் இல்லை. அத்தகைய ஒரு திட்டம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அதன் அமுலாக்கலில் மத்திய அரசுடன் பிரச்சனைகள் எழுந்திருக்கலாம். அந்தக் கட்டத்தில் அபிவிருத்தித் திட்டத்தை மக்களின் ஜனநாயகப் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டத்தின் கருவியாக்கி இருக்கலாம். அதற்கு நாட்டின் ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்றிருக்கலாம். இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சிந்தனை மாகாண சபையிடம் இருக்கவில்லை.

அதேபோன்று காசாதாரப் பொருளாதாரத்தை மாகாணத்தின் அபிவிருத்திக்கு உதவும் வகையில் மாற்றியமைப்பது பற்றிய கொள்கை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாணத்தின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பங்கு பற்றிய கொள்கை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாண சபையின் முயற்சியின் விளைவாக மக்களின் – விசேடமாகப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் – சமூக மேம்பாடு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் ஊழல் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழலை முதலமைச்சர் இதுவரை காணாமல் இருந்தது அதிசயமே. இதை அவரால் ஏன் முளையிலே கிள்ளிவிட முடியவில்லை? இந்த நிலை உருவானதில் அவருக்கு ஒரு பொறுப்பும் இல்லையா? இதுவரை அவரின் பொறுப்பிலிருக்கும் அமைச்சுகளின் வினைத்திறன் பற்றிய மதிப்பீடு என்ன?

மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரம் போதாது என்பதில் நியாயம் உண்டு. மத்திய அரசுக்கும் மாகாண சபைக்குமிடையிலான உறவு மிதமிஞ்சிய அசமத்துவமாயிருப்பது உண்மை.  கூடுதலான அதிகாரப்பகிர்வுக்காகப் போராடவேண்டும் என்பதிலும் நியாயமுண்டு. ஆனால் இருக்கும் அதிகாரத்தை மக்களின் மனித நன்நிலையை வளர்க்க உதவும் வகையில் பயன்படுத்துவதற்கான திட்டமெதுவுமின்றி மாகாண சபையைக் கைப்பற்றுவதனால் எதைச்சாதித்துள்ளது TNA எனும் கேள்வி நியாயமானதே. இன்று TNAன் சீர்குலைவு ஒரு துன்பியல் கலந்த நகைச்சுவை நாடகமாக அரங்கேறியுள்ளது. அதற்கு மாற்றாகத் தோன்றியிருக்கும் தமிழ் மக்கள் பேரவை (TPC) இந்த நாடகத்தின் ஒரு உப காட்சியாகச் சமாந்திரமாகத் தொடர்கிறது. பேரவை தன்னைக் கூட்டமைப்பையும் விடப் பெரிய தமிழ் தேசிய வாதியாகக் காட்ட முற்படுகிறது. இந்தக் குறுந்தேசியவாதப் போட்டியின் விளைவுகளால் இனவாத அரசியலே மேலும் பலப்பட்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மேலும் தனிமைப்படும். இதனால் வருந்தப் போவது மக்களே.

கிழக்கு மாகாணம் வடக்கைவிட பல்லினமயப்பட்டது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மேலும் இனவாதப்போக்கில் அரசியல் மயப்படுத்தித் தேர்தலில் வாக்குப்பெறும் வழிகளையே எல்லாக் கட்சிகளும் பின்பற்றுகின்றன. அதேவேளை மாகாண சபையின் தலைமைக்கும் அரசாங்கத்துக்கு மிடையிலான உறவு வடக்கிலிருந்து வித்தியாசமானது. இன்று கிழக்கில் TNAயே மிகப்பெரிய தமிழ் அரசியல் அமைப்பு. அது மாகாண சபை ஆட்சியில் ஒரு பங்காளி. ஆயினும் இன்றைய தமிழ் அரசியல் (TNA,TPC), தமிழ் டயஸ்போறாவின் பங்களிப்பு மற்றும் மக்களின் மனித நன்நிலையை மையமாகக்கொண்ட அபிவிருத்திக் கொள்கை இல்லாமை பற்றி மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கிழக்கிற்கும் பொருந்தும்.

அரசாங்கத்தின் அழைப்பு தமிழ் டயஸ்போறாவில் பலவிதமான கருத்துக்களையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு ஒரு முனையிலும் முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாடு மறுமுனையிலும் இருக்க இந்த இரண்டிற்குமிடையே சில போக்குகளையும் காணலாம். முதலாவது நிலைப்பாட்டைக் கொண்டவர்களில் இலாபநோக்குடன் முதலீடுகள் செய்ய விரும்புவோர் அடங்குவர். வடக்கு கிழக்கில் இலாபம்தரும் முதலீடுகளை ஏற்கனவே சில புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்துள்ளார்கள். இந்த முதலீடுகள் விசேடமாக உல்லாசத்துறை சார்ந்தவை. இன்றைய ஆட்சியின் அழைப்பு இத்தகைய முதலீட்டாளர்களை மேலும் ஊக்கிவிக்கும் என எதிர்பார்க்கலாம். இவர்கள் அரசின் முதலீட்டு அதிகார சபையின் (Board of Investment ன்) அனுசரணையுடன் தமது முதலீடுகளைச் செய்யலாம். அரசாங்கத்தின் அழைப்பை முற்றாக நிராகரிப்பவர்கள் பொதுவாகத் தீவிர தமிழ்தேசியவாத உணர்வினால் உந்தப்படுகின்றனர்.

இடைப் போக்குகளில் பரவலாகக் கேட்கும் ஒரு கருத்து இருக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் சமூகமேம்பாட்டிற்கு உதவும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதாகும். போரினாலும் வேறுகாரணிகளாலும் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் நன்நிலையில் அக்கறை கொண்ட டயஸ்போறா தமிழர்களில் பெரும்பான்மையினர் அல்லது கணிசமான தொகையினர் இத்தகைய கருத்துடன் ஒத்துப்போவார்கள் எனக்கருத இடமிருக்கிறது. வாழ்வாதாரவிருத்தி, இளம் சந்ததியினரின் கல்வி, தொழில்பெறும் தகைமைகள் மற்றும் மேல்நோக்கிய சமூக நகர்ச்சி போன்றவற்றிற்கு இவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இத்தகைய கருத்துடையோர் மத்தியில் ஒரு சாரார் அரசியலை முற்றாக ஒதுக்கியே சமூக மேம்பாட்டைப் பார்க்கிறார்கள். மற்றயோர் அரசியல்ரீதியில் சிந்திப்போர். அரசாங்கம் பற்றித் தம் விமர்சனங்களைக் கொண்டுள்ளோர். அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் அல்லது அதைப் பின்தள்ளாத வகையிலயே சமூகமேம்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனும் பார்வையைக் கொண்டுள்ளோர். இருசாராரும் அரசுசாரா மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்குடாகவே செயற்பட விரும்புகின்றனர். இத்தகைய தொடர்புகளைப் பல குழுக்கள் ஏற்கனவே கொண்டுள்ளன. ஆயினும் நிறுவனங்களின் மற்றும் மனிதர்களின் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவையும் ஆற்றல்களையும் விருத்தி செய்யும் திட்டங்களைப் பொறுத்தவரை அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவேண்டிய தேவையையும் இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனது அபிப்பிராயத்தில் போரினாலும் வேறுகாரணிகளாலும் இடர்பாட்டிற்குள்ளாயிருக்கும் மக்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட விரும்பும் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியதே. அதேவேளை இந்த மக்களை உள்வாங்கியிருக்கும் அதிகார உறவுகளைக் கணக்கில் எடுக்காது அவர்களின் நிலைமைகளைச் சரியாக அறிந்து கொள்ள முடியாது. அவர்களை அந்த உறவுகளிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அந்த உறவுகளைப் புரிந்து கொள்வது அவர்களின் அன்றாட போராட்டங்களின் தன்மைகளையும் அந்தப் போராட்டங்களின் சமூகரீதியான அரசியல்ரீதியான முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள உதவும். போரினால் பாதிக்கப்பட்டோர் எனும்போது அது ஒரு மிகப்பரந்த வகைப் படுத்தலைக் குறிக்கலாம். இந்த வகையுள் போர்ப் பிரதேசங்களில் வாழும் எல்லோரும் அடங்குவர். ஆனால்  ‘பாதிக்கப்பட்டோர்’ எனும் போது மனித நன்நிலைகுன்றிய, உரித்துடமைகள் இழந்த நிலைமைகளில் வாழ்வோரையே பலரும் மனதில் கொண்டுள்ளார்கள் எனக் கருதுகிறேன். இந்த வகையினர் எப்படி அவர்களின் வாழ்நிலைகளுக்காளானார்கள்? ஏன் அந்த நிலைமைகளில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இல்லாமல் அவர்களின் அன்றாட வாழ்வுப் போராட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய புரிந்துணர்வு அவர்களின் நிலைமைகளைத் தனியே ஒரு மனிதாபிமானப் பிரச்சனையாகப் பார்ப்பதற்கும் அப்பால் அவற்றின் வர்க்க, பால், சாதி, பிரதேச ரீதியான பரிமாணங்களை அறிந்து கொள்ள உதவும். இப்படிப் பார்க்கும்பொழுது மக்களுக்கும் அரசுக்குமிடையிலான நேரடியான முரண்பாடுகளையும் மற்றைய சமூக, பொருளாதார முரண்பாடுகளையும் இனம் காணமுடியும். இந்த உறவுகளெல்லாம் அதிகார உறவுகள் என்பதும் தெளிவாகும். இந்த மக்களின் அன்றாட போராட்டங்களில் வாழிட உரிமை, வாழ்வாதார அபிவிருத்தியும் பாதுகாப்பும், சுரண்டல் மிகுந்த கடன் உறவுகளிலிருந்து விடுபடுதல், இளம் சந்ததியின் உடல் நலன், கல்வி மற்றும் மனித ஆற்றல்களின் விருத்தி, மனித மற்றும் சமூகப் பாதுகாப்பு உரித்துடைமைகள், சூழல் பாதுகாப்பு போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தன. இந்த அன்றாடப் போராட்டங்கள்  பொதுவாகத் தனிமனித, குடும்ப மட்டங்களிலும் சில சமயம் குறிப்பிட்ட கிராமிய அல்லது பிரதேச மட்டத்தில் கூட்டுச் செயற்பாடுகளுக்கூடாகவும் இடம்பெறுகின்றன. உதாரணங்களாக இராணுவம் கைப்பற்றியுள்ள தமது நிலங்களுக்கான மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அணிதிரட்டல்களும் போராட்டங்களும் பாதிக்கப்பட்டொரினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் கூட்டுச் செயற்பாடுகளாகும். துரதிஷ்டவசமாகப் பொதுவான பிரச்சனைகள் உள்ள வேறு பகுதியினரை அணிதிரட்டி அவர்களின் கோரிக்கைகளுக்குக் கூட்டான குரல் கொடுக்கும் அமைப்புக்கள் இல்லை. உதாரணங்களாக வறுமையில் வாடும் பெருந்தொகையான பெண்தலைமைக் குடும்பங்கள் மற்றும் முன்னைநாள் போராளிகளைக் குறிப்பிடலாம். அதேபோன்று கல்வி, சுகாதார, சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத கிராமங்களையும் குறிப்பிடலாம்.

இங்கு சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ள விடயங்கள் ஆழ ஆராயப்படவேண்டியவை. அத்தகைய அறிவின் உதவியுடனேயே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் தமது திட்டங்களை வகுத்து நாட்டில் பங்காளர்களைத் தேட வேண்டும். இனங்களுக்கிடையிலான குரோதங்களை வளர்க்காது அதற்கு மாறாக புரிந்துணர்வையும் சமத்துவத்தையும் வளர்க்கும் அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். செயற்பாடுகளைச் சட்டபூர்வமான வழிகளில் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான சூழலை மத்திய அரசாங்கமும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளும் உருவாக்கவேண்டும். இங்கு அரசியலைத் தவிர்க்கமுடியாது. அரசாங்கத்துடன், மாகாண சபைகளுடன், வேறு அரசியல் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் தேவைப் படலாம் ஆனால் அரசாங்கத்தின் பங்காளராக வேண்டியதில்லை. உண்மையான பங்காளர்கள் வேறு மட்டங்களில் அரசாங்கத்திற்கு வெளியேதான் உள்ளார்கள். அங்கு அன்றாடு போராடிகொண்டிருக்கும் மக்கள் மற்றும் அவர்களின் சுயமுனைப்புகளை ஊக்குவிக்கும் அமைப்புக்கள், நாட்டில் சகல மக்களின் சமூக, அரசியல், பொருளாதார ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள், முற்போக்கு அறிவாளர்களின் அமைப்புக்கள், இனவாதங்களுக்கு எதிரான அமைப்புக்கள் போன்றவைதான் பங்காளிகளாக வேண்டும்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More