குளோபல் தமிழ்ச் செய்திகள்
முல்லைத்தீவின் உப நகரங்களான மாங்குளத்திற்கும் ஒட்டுசுட்டானுக்கும் இடையில் கூடுதல் பேரூந்து சேவைகளை பணியில் ஈடுபடுத்துமாறு பொது மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இரு உப நகரங்களும் அமைந்துள்ள போதிலும் ஒட்டுசுட்டானில் இருந்து காலை 8.00 மணிக்கு மாங்குளம் நோக்கிச் செல்லும் பேரூந்து பின்பு காலை 10.00 மணிக்கே திரும்பி வருவதாகவும் மாலை 3.00 மணியுடன் குறித்த இரு உப நகரங்களுக்குமிடையில் பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம், ஒட்டுசுட்டான் பிரதேச மருத்துவமனை என்பவற்றிற்கு வருகை தரும் மேழிவனம், கரிப்பட்டமுறிப்பு, புதுக்கிராமம், ஒலுமடு, அம்பகாமம், மாங்குளம், பனிக்கங்குளம் போன்ற கிராமங்களின் மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
குறித்த வீதியில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் வீதிக்கு யானைகள் வருவதன் காரணமாக நடந்து கூட கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் இரு நகரங்களிலும் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இந்நிலையில் ஒட்டுசுட்டானுக்கும் மாங்குளத்திற்கும் இடையில் பேரூந்து சேவைகளை அதிகரிக்குமாறும் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.