193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை குறித்து உடனடியாக தமது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட
யாழ்.பல்கலைகழக இரு மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை முல்லைத்தீவு போலீசார் விசாரணைக்கு அழைத்தமை சாட்சியங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் செயற்பாடு அது குறித்து நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. அவை குறித்து விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டு இருந்தார். ஆனால் இன்றைய தினம் வரையில் குறித்த அறிக்கையை போலீசார் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தேக நபர் விசாரணையின் போது சம்பவம் குறித்து உடனடியாகவே மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றேன் என தெரிவித்து உள்ளார்.
அவ்வாறு ஆயின் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து இந்த சம்பவத்தை மறைக்க முயன்று உள்ளார்களா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. என தெரிவித்தார்.
குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் , அதுவரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
பின்னணி.
யாழ். பல்கலை கழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை யாழ்.போலிஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.போலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Spread the love