யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சாந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சின் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது வடமாகாண பொருளாதார அவிவிருத்தி செயறபாடுகள் குறித்து வினவியுள்ளதுடன் முறையான திட்டங்கள் வகுக்கப்படுமாயின் வடமாகாணத்தின் பொருளாதார விருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாக சந்திப்பின் நிறைவில் கருத்து தெரிவித்த முதலமைச்சர் தெரிவித்தார்.
பல்வேறு விடயங்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அதனடிப்படையில், பலாலி விமான நிலையம் மற்றும் மயிலிட்டி துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம் உட்பட மன்னார் ஊடாக தனுஷ்கோடிக்கான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவற்றில் சில வேலைத் திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்திற்கு வடமாகாணத்தில் இருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றதெனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் இருந்து 4 விண்ணப்பங்கள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் 50 பேருக்கான வாய்ப்புக்கள் உள்ளநிலையில் அந்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்த தவறுவது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.