மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்து உமா ஓயா திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து கண்டறிவது தொடர்பில் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொறியியலாளர்களின் ஆலோசனைகளைக் கவனத்திற்கொள்ளாது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக மோசமான விளைவுகளுக்கு பிரதேச மக்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிழையான அரசியல் முடிவுகளை எடுத்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தவர்கள் அமைதி காத்து வருவதாகவும் பிழையான மதிப்பாய்வை செய்து திட்டத்தில் நிதி மோசடி செய்தவர்கள் குறித்து தனியான விசாரணையை மேற்கொள்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று (29) நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்
மக்கள் நிராகரித்த இத்திட்டத்தை நிறுத்துவது குறித்து தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கவனம் செலுத்தியபோதும், அந்த நேரத்தில் இக்கருத்திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி நிறைவு பெற்றிருந்த காரணத்தினாலும் இதற்காக ஈரான் அரசாங்கத்திடமிருந்து பெருமளவு கடனைப் பெற்றுக் கொண்டிருந்தமையினாலும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இத்திட்டத்தை முன்கொண்டு செல்ல வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தான் கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது ஜெர்மன் நாட்டின் அகழ்வு நடவடிக்கை தொடர்பான நிபுணர் ஒருவர் இது தொடர்பாக ஆய்வை ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக ஆய்வுக்காக இன்னும் சில வாரங்களில் நோர்வே நாட்டின் நிபுணர்கள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று மின்சாரசபை ஊழியர்கள் மேற்கொண்டிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த அரசாங்கம் மின்சார சபையில் உள்ள உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு மட்டும் பெருமளவு சம்பளத்தை அதிகரித்ததுடன், கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காத காரணத்தினால் அவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.