நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள, ஒருவந்தூர் காவிரி ஆற்றில் செயல்படும் மணல் குவாரியை மூட வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 448 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த குவாரியை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் போன்றன நடைபெற்ற போதும் தொடர்ந்தும் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
போராட்டத்தின் போது விவசாயி ஒருவர் மணல் குவாரியை மூட வலி யுறுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற றிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் தடுத்து நிறுத்தினர்.
ஒருவந்தூர் அரசு மணல் குவாரியை மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும எனவும், மணல் குவாரியால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட செல்ல.ராசாமணி உட்பட 448 பேரை காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.