தமிழ்நாட்டின் ஆர். கே. நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்த சாதகமான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது எனவும் சாதகமான சூழல் உருவானதும் தேர்தல் நடத்தப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி வெற்றிடமானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையகம் அறிவித்தது.
இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையகத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்ததனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையின் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதனை அடுத்து இடைத்தேர்தலை ரத்து செய்ய்யப்பட்டது. இந்தநிலையிலேயே தேர்தல் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அந்தந்த தரப்பினர் பிரமாண பத்திரங்களை கையளித்துள்ளனர் எனவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான திகதியை தேர்தல் ஆணையகம் முடிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.