டெரி கோபங்காவுக்கு அன்று திருமணம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மணமகளையே காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் பரபரப்பாகத் தேடுகிறார்கள். எங்குமே அவரைக் காணவி்ல்லை. பரபரப்பு பற்றிக் கொள்கிறது.
அவர் கடத்தப்பட்டிருப்பார் என்றோ, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்காப்பட்டிருப்பார் என்றோ அல்லது மரணத்தின் விளிம்பில் சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பார் என்றோ யாரும் ஊகித்திருக்கமாட்டார்கள். இளம் நைரோபி போதகரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இரு சோகங்களில் இதுதான் முதன்மையானது. ஆனால், அந்தக் கோர சம்பவத்திலிருந்து அவர் மீண்டு வந்திருப்பதுதான் முக்கியமானது.
அது ஒரு மிகப்பெரிய திருமணம். நான் ஒரு போதகராக இருந்தேன். அதனால் திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களும், எங்களுடைய உறவினர்களும் வந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய எதிர்கால கணவர் ஹாரியும், நானும் மிகவும் உற்சாகமாக இருந்தோம். எங்களுடைய திருமணம் நைரோபியில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் தேவாலயத்தில் நடைபெறவிருந்தது. நான் ஓர் அழகான ஆடையையும் வாடகைக்கு எடுத்து வைத்திருந்தேன்.
ஆனால், திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய இரவுதான், ஹாரியின் சில உடைகள் என்னிடம் இருந்ததை நான் உணர்ந்தேன். மறுநாள் காலையில் முதல் வேலையாக அதை அவரிடம் கொடுக்க என்னுடைய தோழி ஒருவர் ஒப்புக்கொண்டார். விடியற்காலையில் அவளை ஒரு பேருந்து நிலையத்திலிருந்து அனுப்பி வைத்தேன்.
என்னுடைய வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, திடீரென சாலையோரத்தில் கார் ஒன்றின் மீது அமர்ந்து கொண்டிருந்த நபர் என்னை பின்புறத்தில் இருந்து இழுத்து காரின் பின் இருக்கையில் தள்ளினார். அங்கு இன்னும் இருவர் அமர்ந்திருந்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் நடந்துவிட்டன.
ஒரு சிறிய துணி என்னுடைய வாயில் அடைக்கப்பட்டது. நான் அவர்களை எட்டி உதைத்து தாக்கினேன். உதவிக்காக கத்துவதற்கு முயற்சித்தேன். துணியை எப்படியோ வெளியே தள்ளி, ‘இன்று எனக்கு திருமணம்’ என்று கத்தினேன். அப்போதுதான் முதல் குத்து என்முகத்தில் விழுந்தது. ”எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடு அல்லது செத்துவிடுவாய்” என்று அதிலிருந்த ஒருவன் கூறினான்.
என்னை காரில் கடத்திச்சென்ற ஆண்கள் மாறி மாறி பாலியல் வல்லுறவுக்கு என்னை உட்படுத்தினார்கள். என் மூச்சு நின்றுவிடுவதைப் போலத்தான் நிச்சயமாக உணர்ந்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருந்தேன். என்வாயில் அடைத்திருந்த துணியை ஒருவன் வெளியே எடுத்த போது அவனுடைய ஆணுறுப்பை கடித்துவிட்டேன். அவன் வலியால் துடித்தான். அவனோடு இருந்த மற்றொருவன் எனது வயிற்றில் கத்தியால் ஓங்கி குத்தினான். அதற்குபிறகு, ஓடிக் கொண்டிருந்த காரின் கதவை திறந்து என்னை வெளியே தூக்கி வீசினார்கள்.
என்னுடைய வீட்டிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் நைரோபிக்கு வெளியே விழுந்து கிடந்தேன். நான் கடத்தப்பட்டு ஆறு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
ஒரு குழந்தை நான் வெளியில் வீசப்பட்டதை பார்த்துவிட்டு அவருடைய பாட்டியை அழைத்து வந்தது. பொதுமக்கள் பலர் ஓடி வந்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து எனது நாடியை சோதித்த பார்க்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. நான் இறந்துவிட்டதாகக் கருதி, என்னை ஒரு போர்வையால் மூடி பிணவறைக்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், போகும் வழியில், போர்வைக்குள் இருந்த எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருமினேன். அதனை உடனடியாக கவனித்த போலீஸார் கென்யாவில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
உடல் முழுவதும் என்னுடைய ரத்தம் படிந்திருக்க நான் அரை நிர்வாணமாக இருந்தேன். குத்துப்பட்டதால் என்னுடைய முகம் வீங்கிப்போயிருந்தது. ஆனால், மருத்துவமனையிலிருந்த தலைமை செவிலியரை ஏதோ ஒன்று எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். காரணம், நான் ஒரு மணமகள் என்று கணித்திருந்தார்.
திருச்சபைக்கு நான் வராததை அடுத்து என்னுடைய பெற்றோர் பதற்றமடைந்தனர். என்னைத்தேடுவதற்காக பலர் அனுப்பப்பட்டனர். வதந்திகள் பரவின.
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை கேள்விப்பட்டு என்னுடைய பெற்றோர்ஒட்டுமொத்த கூட்டத்தினருடன் மருத்துவமனைக்கு வந்தனர். என்னுடைய திருமண ஆடையை ஹாரி கையில் வைத்திருந்தார். அதேசமயம், இதுகுறித்து ஊடகங்களுக்கும் தகவல் தெரிந்து அவர்களும் மருத்துவமனையில் கூடிவிட்டனர்.
அதன்பிறகு, தனிமைக்காக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் அங்குதான் மருத்துவர்கள் எனக்கு தையல்களை போட்டனர். அப்போதுதான் அந்த துயர்மிகு செய்தியையும் என்னிடம் தெரிவித்தனர். ”கத்திக்குத்து மிகவும் ஆழமாக கர்ப்பப்பை வரை போனதால் என்னால் குழந்தை பெற்றெடுக்க முடியாது.” என்றார்கள் மருத்துவர்கள்.
அப்போதும் என்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஹாரி கூறிக் கொண்டே இருந்தார். அவருக்கு எந்த பதிலும் சொல்லமு டியாத நிலையில் இருந்தேன். என்னை சூறையாடிய மூன்று பேரின் முகங்களும், எனக்கு நடந்த கொடுமைகளும்தான் நினைவுக்கு வந்து வந்து போயின.
என்னை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபத்தியவர்களை இறுதிவரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பலமுறை அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அதில் என்னால் ஒருவரை கூட அடையாளம் காண முடியவில்லை. என்னுடைய மன ரீதியிலான முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவாக இது அமைந்தது.
3 மாதங்கள் கழித்து எனக்கு எச் ஐ வி தொற்று இல்லை என்று தகவல் கூறப்பட்ட உடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், உறுதியான முடிவுகளுக்காக இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்கும்படி சொன்னார்கள். எனினும், நானும், ஹாரியும் எங்களுடைய இரண்டாவது திருமணம் குறித்து திட்டமிட ஆரம்பித்தோம்.
பத்திரிகைகளின் ஊடுருவல் குறித்த கோபம் எனக்கு இருந்தாலும், எனது கதையை படித்து என்னை சந்திக்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினார். அவருடைய பெயர் விப் ஒகோலா. அவரும் பாலியல் வல்லுறவுக்குள்ளக்கப்பட்டு அதிலிருந்து உயிர் பிழைத்தவர். நாங்கள் இருவரும் சந்தித்து பேசினோம். அவரும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து என்னுடைய திருமணத்தை இலவசமாக நடத்திவைக்க விரும்பினார்கள்.
ஜூலை 2005, முதல் திட்டமிடப்பட்ட திருமணத்திற்கு ஏழு மாதங்களுக்கு பிறகு, ஹாரியும், நானும் திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்கு சென்றோம்.
29 நாட்கள் கழித்து, மிகவும் கடும் குளிரில் நாங்கள் இருவரும் வீட்டிலிருந்தோம். இரவு உணவு முடிந்த பின், ஹாரி ஒரு கரி பர்னரை பற்ற வைத்து படுக்கை அறைக்கு கொண்டு சென்றார். அறை நல்ல சூடான பிறகு அதை அவர் எடுத்துவிட்டார். இரவு அவர் படுக்கைக்கு வரும் போது மயக்கமாக உணர்வதாக ஹாரி தெரிவித்தார். ஆனால், நாங்கள் எதுவும் பெரிதாக நினைக்கவில்லை.
குளிர் அதிகமாக இருந்தது. எங்களால் தூங்கமுடியவில்லை. எங்களால் படுக்கையைவிட்டு எழக்கூட முடியவில்லை. ஏதோ தவறு நடக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தோம். நாங்கள் இருவரும் மயக்கமடைந்தோம். பின்னர், சற்று நேரத்தில் லேசான சுயநினைவுக்கு திரும்பிய நான், தவழ்ந்தபடியே சென்று என்னுடைய அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஃபோன் செய்து உதவி கேட்டேன்.
அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்த போது மீண்டும் மயக்கமடைந்தேன். அதன்பிறகு மருத்துவமனையில்தான் மீண்டும் எனக்கு சுயநினைவு திரும்பியது. எங்கே என் கணவர் என்று மருத்துவர்களிடம் கேட்டேன். அப்போதுதான், ஹாரி உயிரிழந்துவிட்டதை என்னிடம் தெரிவித்தார்கள்.
என்னால் நம்ப முடியவில்லை.
ஹாரியின் இறுதிச் சடங்கிற்காக திருச்சபைக்கு செல்வதென்பது மிகவும் கடினமாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்புதான் இதே திருச்சபையில், கோட் சூட்டில் ஹாரி அழகாக எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்க வெள்ளை நிற ஆடையை நான் அணிந்திருந்தேன். இப்போது, நான் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டிருக்க, ஹாரி சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
நான் சபிக்கப்பட்டவள் என்று மக்கள் எண்ணத் தொடங்கினார்கள். அவர்களது பிள்ளைகளை என்னிடமிருந்து ஒதுக்கி வைத்திருந்தனர். மற்றவர்கள் நான் எனது கணவனை கொன்றுவிட்டதாக குற்றஞ்சாட்டினார்கள்.
ஆனால், பிரேதப்பரிசோதனை அறிக்கையில், ஹாரியின் மூச்சுக்குழாயில் கார்பன் மோனாக்ஸைட் நிரம்பியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவித்தது.
மிகமோசமான சோகத்தை நான் எதிர்கொண்டேன். கடவுள் என்னை கைவிட்டுவிட்டார் என்றும், மற்றவர்களும் என்னை கைவிட்டுவிட்டனர் என்பது போலவும் நான் உணர்ந்தேன். நான் மீண்டும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதை அனைவரிடமும் கூறினேன்.
அந்த துயரம் மிகவும் தீவிரமாக இருந்தது. உங்கள் நகங்களில் உணரும் அளவுக்கு மோசமாக இருந்தது.
ஆனால், அப்போது ஒரு நபர் இருந்தார். அவர்தான் டோனி கோபாங்கா. என்னை அடிக்கடி வந்து சந்தித்தார். எனது கணவரை பற்றி ஊக்கப்படுத்தினார். ஒருமுறை அவரிடமிருந்து மூன்று நாட்களுக்கு தொலைப்பேசி வரவில்லை. அப்போது அவர் மீது எனக்கு கோபம் வந்தது. அப்போதுதான் நான் அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பதை நான் உணர்ந்தேன்.
என்னை திருமணம் செய்துகொள்வதாக டோனி என்னிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், நான் ஒரு பத்திரிக்கையை வாங்கச் சொல்லி, அதில் என்னைப் பற்றி முழுமையாக படித்துவிட்டு அதற்கு பிறகும் என்மீது காதல் இருந்தால் சொல்லுங்கள் என்று அனுப்பிவைத்தேன். அவர் மீண்டும் வந்தார். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், ”கடவுள் தரும் பரிசுதான் குழந்தைகள். கிடைத்தால் வாழ்த்துவோம், கிடைக்காவிட்டால் உன்னை காதலிக்க நிறைய நேரம் எனக்கு இருக்கும்” என்றார்.
அவர் கூறிய அந்த வரிகள் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது.
எங்களுடைய திருமணத்தை டோனியின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எங்களுடடைய திருமணத்திற்கு சுமார் 800 பேர் வருகை தந்திருந்தனர்.
எனது முதல் திருமணம் நடைபெற்று மூன்றாண்டுகள் கழித்து டோனியுடன் திருமணம் நடைபெறுகிறது என்பதால் மிகவும் பதற்றமாக இருந்தேன். பிரார்த்தனை கூட்டத்தின் போது அனைவரும் எங்களுக்காக பிரார்த்திக்க என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன்.
திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டிற்கு பிறகு, நான் சுகவீனம் அடைந்து மருத்துவரிடம் சென்றேன். என்னுடைய பெரிய ஆச்சரியம் நான் கர்ப்பம் தரித்திருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
பல மாதங்கள் படுக்கை ஓய்வை தொடர்ந்து திஹில் என்ற ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அதன் பிறகு, நான்காண்டுகள் கழித்து நாங்கள் டோடா என்ற இரண்டாவது பெண் குழந்தையை நான் பெற்றெடுத்தோம்.
இன்று, என்னுடைய மாமனாருக்கு நான் சிறந்த நண்பர்களில் ஒருவராக இருக்கிறேன்.
மக்கள் மீண்டெழுவதற்கு நம்பிக்கையாக இது இருக்கும் என்ற தன்னம்பிக்கையை விதைப்பதற்காக ‘கிராளிங் அவுட் ஆஃப் டார்க்னஸ்’ என்ற தலைப்பில் நான் சந்தித்த சவால்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளேன்.
காரா ஒல்முரானி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளேன். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு அதிலிருந்து உயிர் பிழைத்தவர்களுக்கு ஆதரவு மற்றும் ஆலோசனை ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.
என்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர்களை நான் மன்னித்துவிட்டேன். அது அவ்வளவு சுலபமானதல்ல. எதற்கும் கவலைப்படாத மனிதர்களை நினைத்து இவ்வளவு நாள் நான் சோகமடைந்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்.
வாழ்க்கையில் எது நடந்தாலும் சரி முன்னேறி கொண்டே இருக்கவேண்டும். தவழ்ந்து செல்ல வேண்டிய சூழல் வந்தாலும் அவ்வாறும் செல்ல வேண்டும். விதியை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும். காரணம் அது காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள்தான் அதைப் பெற வேண்டும்.
Thanks – BBC – படத்தின் காப்புரிமை JOSSE JOSSE