கைதானவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு ஒத்துழைப்போம் என கதிராமங்கலம் பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் நேற்று 3-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாணவர்களும் பாடசாலைக்கு செல்லாமல் வாயில் கறுப்பு துணி கட்டி அமைதி ஊர்வலம் சென்றனர். இதில் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு சீரமைக்கும் பணி நடைபெற்றது. உடைந்த குழாயை அகற்றி விட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டது.
மேலும் கதிராமங்கலத்தில் தற்போது இயல்பான நிலை நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று மாலை பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கதிராமங்கலம் பொதுமக்களுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ள போதும் தாம் இதில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்து உள்ளனர்.
மக்களுக்காக போராடிய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் எனவும் அவர்களை எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்தால்தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் எனவும் அதுவரை தங்கள் போராட்டம் அமைதியான முறையில் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.