காவல்துறையினரின் குடும்பத்தினர் தலைமைச் செயலகத்துக்கு செல்ல உள்ளதாக தகவல்:-
8 மணி நேர வேலை, சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக காவல்துறையினரின் குடும்பத்தினர் தலைமைச் செயலகத்துக்கு வரவுள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து தமிழகத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் காவல்துறையினர் உள்ளனர். காவலர் சங்கம், 8 மணி நேர வேலை, சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை காவல்துறையினர்; நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘தமிழ்நாடு காவல் துறையின் பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் 8 அம்ச கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடந்த 22ம்திகதி ஒட்டப்பட்டிருந்தது.
இன்று, சட்டப்பேரவையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் அரம்பமாகவுள்ளது. இந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறும் வகையில் காவல்துறையினரின் குடும்பத்தினர் முதலமைச்சர் கே.பழனிசாமியைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.
அவர்கள் மெரினா வில் இருந்து கோட்டைக்கு, பேரணியாகச் சென்று மனு கொடுப் பார்கள் எனவும் இதில் காவல்துறையினரும் கலந்து கொள்வார்கள் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங் களில் தகவல்கள் பரவிவந்துள்ளன.
இந்நிலையிலேயே போலீஸார் குடும்பத்தினர் மனு கொடுப்பதை தடுக்க அதிகாரிகள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். மெரினா மற்றும் தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து காவல்துறையினருக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.