குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து (Taranjit Singh Sandhu ) தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஒன்பதாம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கைக்கு பாதகமானது என சில தரப்பினர் பிரச்சாரம் செய்து வருவதாகவும் இந்தப் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வேலை வாய்ப்புக்கள் உருவாகும் எனவும், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் சரியான தகவல்கள், சரியான விளக்கங்கள் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் எட்கா உடன்படிக்கையானது பரஸ்பர நன்மையை இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தக் கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.