குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் இராணுவத் ஜெனரல் தளபதி தயா ரட்நாயக்கவை பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை சீமேந்து உற்பத்திசாலையில் 600 தொன் எடையுடைய இயந்திர சாதனங்களை அறுத்து பழைய இரும்பிற்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ராட்நாயக்கவை தவிர மேலும் மூன்று முன்னாள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, மேஜர் ஜெனரல் உதய அனஸ்லி பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சிரிபால ஹெட்டியாரச்சி ஆகியோரே ஏனைய முன்னாள் அதிகாரிகளாவர்.
எதிர்வரும் 13ம் திகதி பாரிய நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2012-2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சீமேந்து உற்பத்திசாலையை அண்டிய பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்களை வெட்டி அகற்றுவதாகக் கூறி, நல்ல இயந்திர சாதனங்கள் அறுக்கப்பட்டு எடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சுமார் 600 தொன் எடையுடைய இரும்பு இவ்வாறு வெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணகைளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.