கொடிது கொடிது முதுமை கொடிது என்பதற்கு அடுத்ததோர் உதாரணமாக ஒளிபரப்புத் துறையில் நம்மை விட்டு நீங்கிய ஒருவர் அமரர் ரஞ்சித் பெர்ணான்டோ.
நேற்று அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ள செய்தியை நண்பரும் ஊடகவியலாளருமான சுமித் ஜயந்த டயஸ் அறிவித்தார். இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி நிலையமான சுயாதீனத் தொலைக்காட்சி யில் பிரதி பொது முகாமையாளராகப் பணியாற்றியவர் இவர்.
நான் அங்கு தமிழ் நிகழ்ச்சிகள் பொறுப்பாளராகச் சென்றபோது அவர் அங்கு பணியாற்றினார். இலங்கையின் ரூபவாஹினியின் முதலாவது தலைவர் முதலாக பல சிங்கள மொழி பேசும் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், பிரதிப் பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளேன். ஆனால் திரு பெர்ணான்டோவுடன் பணியாற்றிய காலத்தை நான் அழுத்திச் சொல்லக்கூடிய வகையில் அவரது தமிழ் நிகழ்ச்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் அமைந்தன.
அப்படியான ஒருவர் மேலிடத்தில் இருக்கையில் எந்தவொரு தமிழ் நிகழ்ச்சி பொறுப்பாளருக்கும் நிகழ்ச்சிகளை சுயமாகத் தயாரிக்கவும் தீர்மானிக்கவும் முடியும். நான் தயாரித்த நிகழ்ச்சிகள் பற்றிய உள்ளடக்கங்கள் பற்றியோ அதில் பங்கு பற்றுபவர்கள் பற்றியோ எவ்வித கேள்வியும் என்னிடம் கேட்காதவர் அவர். எந்தவிதமான concept ஐயும் கொடுத்தால் budget அளவா என்று மட்டும் பார்த்து விட்டு ஒப்பமிடுவார். திரைப்படத்துறையில் நீண்ட காலம் அனுபவம் பெற்றிருந்தமையால் பல தமிழ் நண்பர்கள் அவருக்கிருந்தனர்.
கே.ஜி.குணரத்தினம், ரொபின் தம்பு, அல்பிரட் தம்பிநாயகம் குடும்பம், வாமதேவன், அர்ச்சுனா, ராம்தாஸ், வி.பி.கணேசன், காவலூர், பாலச்சந்திரன்( கலைச்சங்கம்), சில்லையூர், எடிட்டர் பாலசிங்கம், சந்திரன் ரட்ணம், யோகராஜா, தேவ் ஆனந்த், பாலுமகேந்திரா, ஹுசைன் பாரூக் என்று பலர் அவரின் தமிழ் நண்பர்கள்.
அதனால் அவர் அப் பதவிக்கு வந்த பின்னர்தான் தமிழ் நிகழ்ச்சிகள் பற்றி அறிந்த ஓர் அதிகாரியாகியிருக்கவில்லை. அந்த அனுபவமே என் மீது அவர் கொண்ட நம்பிக்கைக்கான காரணமாயிருந்திருக்கலாம்.
நான் சுயாதீனத் தொலைக்காட்சியில் சுயமாகப் பல நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கும் அறிவிப்பாளர்கள் அறிவிப்பாளினிகள் தயாரிப்பாளர்களைப் பொருத்தமான நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொள்வதற்கும் எவ்வித தடையுமின்றி என்னை என் பணியாற்ற விட்டு வைத்தவர் அவர்.
கண்டிப்பு, கோபம், எச்சரிக்கை என்று எல்லாவற்றையும் புன்னகையுடனேயே கையாளும் அவரின் பழைய முகத்தையே
நினைவில் வைத்திருந்த எனக்கு நேற்று அவர் தொடர்பாக வந்த குறிப்பில் இருந்த அவரது முதுமைப் படம் எனது இக்குறிப்பின் முதல் வசனத்தை ஆரம்பித்து வைத்தது.
மிஸ்டர் பெர்ணான்டோ! நிம்மதியாய்ப் போய் வாருங்கள்!!