காவிரி நதி நீரில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு
கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கிறது.
குறிப்பாக பெங்களூர் மாநகரத்தின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன. அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது.
இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். இந்த நீரை அருந்தும் உயிரினங்களுக்கும் கேடு ஏற்படுகிறது.
எனவே, கர்நாடக மாநிலத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல், கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்து பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்றையதினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து நீதிபதிகள், காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இரு மாநில நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவதுடன், வருகிற ஓகஸ்டு மாதம் தொடங்கி ஓராண்டு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
எனினும் தமிழக அரசின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஓராண்டு என்பது மிகவும் நீண்ட கால அவகாசம் என்றும், நாளுக்கு நாள் இந்த பிரச்சினையின் தீவிரம் அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்களை கலந்து ஆலோசித்து இது தொடர்பாக ஓகஸ்டு மாதம் உரிய ஆய்வு நடத்தி 6 மாதங்களுக்குள் விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றல் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.