குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளை கைவிட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது என குறிப்பிட்டுள்ள அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என தெரிவித்துள்ளார்.
அனைவரும் அரசியல் சாசனத் திருத்தங்களை விரும்புவதாகவும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், அமைச்சர்கள் அரசியல் சாசனத் திருத்தங்களை விமர்சனம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அரசியல் சாசனம் அமைப்பதனை விரும்பாவிட்டால் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்ல முடியும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.