குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீளவும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மருத்துவ பேரவையின் தலைவர் பதவியிலிருந்து டொக்டர் கார்லோ பொன்சேகா நீக்கப்பட்டால், நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் மாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைய பணிப் புறக்கணிப்பு இடைநிறுத்தப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சுகாதார அமைச்சர் இலங்கை மருத்துவ பேரவையின் தலைவர் பதவியில் மாற்றம் செய்ய முயற்சித்தால் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதனை தவிர வேறு மாற்று வழியில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
கார்லோ பொன்சேகாவிற்கு பதிலாக நியமிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ள பேராசிரியர் பல்தேசிய மருந்து உற்பத்தி நிறுவனமொன்றுடன் தொடர்புடையவர் என தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், கார்லோ பொன்சேகாவைத் தவிர வேறும் எவரையும் தலைமைப் பதவியில் அமர்த்த இடமளிக்காது என சுட்டிக்காட்டியுள்ளது.