குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எமது தனிப்பட்ட குரோதங்கள் முரண்பாடுகளுக்காக பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல , அதனால், மாற்று தலைமைக்கு இடமே இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டு இருந்த கனேடிய உயர்தானிகர் ஷெல்லி வைட்டிங் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
தற்போதைய சூழலில் தமிழ் மக்களுக்கு மாற்று தலைமைக்கு இடமில்லை. அது தொடர்பில் முடிவெடுக்கவும் எதுவும் மில்லை . தற்போது முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல அதனால் எந்த பிரிவினைக்கும் இடமில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை துன்னாலை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டு படுகொலை செய்தமை தொடர்பில் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ,
பொலிசாரின் கட்டளையை மீறி ஒருவர் செல்கின்றார் எனில் வாகன சில்லுக்கு சுட்டு இருக்கலாம், அல்லது வேறு போலீசாருக்கு அறிவித்து அவர்களை மடக்கி பிடித்து இருக்கலாம் ஆனால் அவர்கள் ஒருவரை சுட்டுகொன்றுள்ளார்கள். அதுவும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் , தனது ஊரை சேர்ந்தவரை சுட்டு கொன்று உள்ளார் என அறிந்ததும் மிக வேதனை அடைந்தேன். பொலிசார் தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார்கள்.
இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தார்கள் என இரு போலீசாரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி உள்ளார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்பதனை என முதலமைச்சர் தெரிவித்தார்.