குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெள்ளவத்தையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ஒருவர் கைது செய்யப்பட உள்ளார். கடற்படையின் முன்னாள் பேச்சாளராக கடமையாற்றிய கப்டன் டி.கே.பீ. தசநாயக்கவே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளார்.
வெள்ளவத்தையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் உள்ளிட்ட 11 பேர் காணாமல் போன சம்பவங்ங்கள் தொடர்பில் கப்டன் தசநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு தசநாயக்கவிற்கு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், தசநாயக்க விசாரணைப் பிரிவில் பிரசன்னமாகவில்லை எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு கோட்டே நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை ஐந்து இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நேற்று கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றில் நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆறு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் விசாரணைகளின் போது கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு தொடர்பு இருக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் அவரை கைது செய்ய உள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்றி குற்ற விசாரணைப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் தமது கட்சிக்காரரை கைது செய்வது சட்டவிரோதமானது என தசநாயக்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்ததகாவும் விசாரணைகளின் மூலம் சம்பவத்துடன் தொடர்பு உண்டு என சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்வதில் சிக்கல்கள் கிடையாது எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட உள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தசாநாயக்க தற்போது வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117795/language/ta-IN/2008-2009—-.aspx