இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்கும் பிரச்சினையில், இந்திய மத்திய அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இந்தியா முழுவதும் தடை விதித்துள்ளது.
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என கடந்த மே மாதம் இந்திய மத்திய அரசு தடை உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக மதுரையை சேர்ந்த சிலர் சென்னை உயர்நீதிமன்றின் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றில் விசாரணைக்கு வந்தநிலையில் மத்திய அரசு யாரையும் பாதிக்காத வகையில் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடுவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்ததுடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை விதித்துள்ள தடை தொடரும் என்றும் இந்த தடை நாடு முழுவதும் பரவலாக அமுலில் இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலம் கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை வாங்கவும் விற்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்றல் – இந்திய மத்திய அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை:-
151
Spread the love