202
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எமது நாட்டில் இயற்றப்பட்ட சட்டத்தை கண்டித்து தமிழ் நாட்டில் நடைபெறும் போராட்டம் அர்த்தமற்றது. அது அரசியல் இலாபத்திற்காக மேற்கொள்ளப்படும் போராட்டம் என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் நாட்டு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த சட்டத்திற்கு கறுப்பு சட்டம் என்று பெயர் வைத்துள்ளார். எங்கள் நாட்டில் எங்கள் வளங்களை பாதுகாத்து தூர நோக்க சிந்தனையில் எங்கள் அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
எங்கள் நாட்டுக்குள் அத்து மீறி நுழைந்து எங்கள் வளங்களை கொள்ளையடித்து செல்வதனை தடுக்கும் முகமாக நாங்கள் இயற்றிய சட்டம் கறுப்பு சட்டமா ? அவர்கள் நாட்டில் வளங்கள் இல்லை என்றால் அந்த நாட்டு மக்களுக்கு வளங்கலையோ இடத்தையோ காட்ட வேண்டியது அந்த நாட்டு தலைவர்களின் கடமை அதனை விடுத்து அடுத்த நாட்டுக்குள் புகுந்து களவெடுத்து வா என ஊக்கிவிற்பதா ?
இன்று எமது நாட்டில் சட்டம் இயற்றப்பட்டதை கண்டித்து அவர்கள் நாட்டில் நடைபெறும் போராட்டம் அர்த்தமற்றது. அது அரசியல் இலாபத்தை கருதி வைகோ , ஸ்டாலின் மற்றும் ராமதாஸ் ஆகியோர் நீலிக்கண்ணீர் வடிப்பது தமிழ் நாட்டு மீனவர்களை ஏமாற்றவே என்றே நான் கூறுவேன். என தெரிவித்தார்.
இலங்கை இந்தியாவின் மாநிலம் அல்ல.
வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் முஹமட் ஆலம் கருத்து தெரிவிக்கையில் ,
இழுவை மடி தடைசெய்யப்பட்ட தொழில் என்பதில் இருந்து இந்த சட்டத்தின் மூலம் இழுவை மடி தொழில் சட்டவிரோத தொழில் எனும் வரையறைக்குள் வந்துள்ளது.
இலங்கை இறைமை உள்ள நாடு. அது இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல.இலங்கை தனது நாட்டு மக்களின் நலன் கருதி இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.
எங்கள் மக்கள் பட்டினியால் இறந்து போய்க்கொண்டு இருக்கையில் எமது நாட்டு வளங்களை சுரண்டி அவர்கள் சுக போகங்களை அனுபவித்துக்கொண்டு எமது சட்டத்தை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. அதேவேளை இந்த சட்டத்திற்கு எதிராக தாம் பாரிய நடவடிக்கைகளை எடுப்போம் என கூறுவது இந்த நாட்டை அச்சுறுத்துவது போன்று உள்ளது.
தமிழ் நாட்டு இழுவை மடி தொழில் செய்பவர்கள் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அல்லது அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என நாம் கடந்த காலங்களில் பலமுறை கூறி வந்தோம். இன்று அதனை அவர்கள் உர்ஜிதப்படுத்தும் முகமாக செயற்படுகின்றார்கள் மீனவர்களை விட அரசியல் வாதிகளே பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.
இதுவரை கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதுவரை கைப்பற்றப்பட்ட படகுகளை மீள இந்த கடற்பரப்புக்குள் ஊடுருவ கூடாது எனும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை நாம் அரசாங்கத்தை நாமும் கோரியுள்ளோம்.
இந்தியா மட்டுமின்றி சீனாவோ வேறு எந்த அந்நிய நாட்டு மீனவர்களும் இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவ கூடாது. இந்த சட்டத்தின் மூலம் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். என நாம் அரசாங்கத்தை கோருகின்றோம். என மேலும் தெரிவித்தார்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சட்டவிரோத கடற்தொழிலுக்கு ஆதரவு.
இந்தியாவில் இருந்து இழுவை மடி படகில் வருபவர்கள் இறால் உற்பத்தி ஆகும் இடங்கள் மற்றும் அதிகளவில் இறால் பிடிபடும் இடங்களை ஜி.பி.எஸ் ஊடாக பிக்ஸ் அடிச்சு அந்த இடத்திற்கு வந்து அவற்றை பிடித்து செல்கின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டமானது இறால் வங்கி என்று அழைக்கப்படும். இன்று முல்லைத்தீவு மீனவர்கள் இறால் பிடிக்க வழியின்றி உள்ளனர்.
அதேவேளை , முலைத்தீவு மாவட்டத்தில் பிற மாவட்டங்களில் இருந்து வந்து தொழில் செய்யும் மீனவர்கள் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு முல்லைத்தீவு கடற்தொழில் திணைக்கள உயர் அதிகாரிகள் கூடிய ஆதரவுகளை வழங்குகின்றார்கள். அதிகாரிகளின் ஆதரவுடனையே முல்லைத்தீவு கடலில் சட்ட விரோத மீன்பிடி தொழில்கள் நடைபெறுகின்றது.
குறிப்பாக கரை வலை இழுக்க உழவு இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். 21 கம்பான் தூரத்திற்கு அப்பால் தான் வலையை போட்டு இழுக்க வேண்டும். அதற்கு மனித வலுவினை பாவிக்க வேண்டும். ஆனால் தற்போது உழவு இயந்திரங்கள் ஊடக 70 , 80 கம்பாங்களுக்கு அதிகமான தூரத்திற்கு போட்டு இழுகின்றார்கள்
காலை 6 மணிக்கு போட்டால் மாலை 6 மணிக்கே இழுக்கின்றார்கள். அதனால் தூரத்தில் சிறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மனித வலுவை பயன்படுத்தி கரை வலை இழுப்பவர்கள் இவர்களின் வலைகள் மீது ஏறுப்படுகின்றார்கள். அதனால் அவர்கள் இடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இது தொடர்பில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றார்கள் அல்ல . அவர்கள் தமிழர்களாக இருந்தும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படும் போது பெரும்பான்மையின மீனவர்களுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார்கள்.
Spread the love