கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நோபல் பரிசு பெற்ற சீனா எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான 61 வயதுடைய லியு ஷியாவ்போவ் மருத்துவமனையில் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2009-ம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக கலகத்தைத் தூண்டியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து வந்தார். அரசியல் சீர்த்திருத்தங்களுக்கான ‘சார்ட்டர் 08’ என்ற மனுவை எழுதுவதற்கு இவர் உதவி புரிந்ததாகவும் இதனால் அரசு அதிகாரத்தை எதிர்த்து கலகம் செய்ததாகவும் சீன அரசினால் குற்றம்சாட்டப்பட்டார்.
இவர் சமீபத்தில் சிறையிலிருந்து ஷென்யாங்கில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
இவரது உடல் நலம் குறித்த தகவல்களை சீன அரசு வெளியிடாமல் வைத்திருந்தமை குறித்தும் , அவரை நடத்திய விதம் குறித்தும் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.