அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை பதவி நீக்கம் செய்யக் கோரி ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது ரஷ்ய வழக்கறிஞர் நடாலியாவை ட்ரம்பின் மகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் நியூயார்க்கில் சந்தித்துப் பேசியிருந்தார்.
நடாலியா ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு மிகவும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்படும் நிலையில் ஜூனியர் ட்ரம்ப் – நடாலியா சந்திப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இவ்வாறு தீர்மானம் தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தலையீடு காரணமாகவே ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என ஆரம்பம் முதலே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரட் ஷெர்மேன் நாடாளுமன்ற சிறப்புக் குழுவிடம் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
இந்த தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்வது குறித்து சிறப்புக் குழு முடிவு செய்யும். வாக்கெடுப்பு நடைபெற்று நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.