ஆப்பிரிக்க பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதனாலேயே அங்கு பிரச்சனை நிலவுகிறது என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உரையாற்றினார். அந்த பேச்சு குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கூட்டத்தில் பேசிய அவர், பொருளாதார ரீதியாகவோ, சூழல் ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஆப்பிரிக்கக் கண்டம் பிரச்னையை எதிர்கொள்ளவில்லை. மாறாக பூகோளரீதியிலேயே ஆப்பிரிக்கா பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு 7 முதல் 8 குழந்தைகள் இருக்கும் போது, அங்கு செலவுகள் அதிகரிக்கும். இதனால் அரசுகளால் நிலையாக எதையும் திட்டமிட்டு நிறைவேற்ற முடியாது என கூறியிருந்தார்.
மாக்ரோனின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். ஆப்பிரிக்கக் கண்டத்தை பெரு நிறுவனங்கள் கொள்ளையடித்ததாலேயே அங்கு பஞ்சம் நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ள பலர், அதைவிடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு நாட்டின் அதிபர் கருத்துத் தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் பிரச்னைகளுக்கு குழந்தைகளைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.