293
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவின் முத்தையன்கட்டுக் குளம் உட்பட காட்டாற்று வெள்ளம் நந்திக் கடல் ஊடாகவே பெருங்கடலைக் கலக்கின்றது. கடந்த முப்பது ஆண்டுகளாக போர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் அரண்கள் மற்றும் நீரோட்டத்தினால கொண்டு வரப்பட்ட மண் அனைத்தும் நந்திக் கடலை நிரப்பி உள்ளன.
இந்நிலையிலேயே கடந்த ஏழு ஆண்டுகளாக நந்திக் கடலினை ஆழமாக்குங்கள் என முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் நந்திக் கடல் சேறு நிறைந்துள்ளது சுட்டிக்காட்டியதாகவும் தெரித்துள்ளார். மீன்பிடியில் ஈடுபடுவதில் நெருக்கடி உள்ளது. நீர் மட்டம் குறைவாகக் காணப்படுவதன் காரணமாக கடல் உயிரினங்களின் பெருக்கம் குறைந்து காணப்படுகின்றது.
எனவே நந்திக் கடலில் இருந்து சேறினை அகற்றி ஆழமாக்கவும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் இதுவரை அப்பணி தொடங்கப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நந்திக் கடல் நீர் வற்றி சேறாகக் காணப்படுகின்றது.
நந்திக் கடல் ஆழமாக்கப்பட்டால் இவ்வாறான நிலைமைகள் உருவாகாது. நந்திக் கடலினை நம்பியுள்ள வற்றாப்பளை, நீராவிப்பிட்டி, கேப்பாப்புலவு, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, அம்பலவன்பொக்கணை, மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் நந்திக் கடலினை நம்பியுள்ள குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் வேண்டுகையாகும் எனவும் அவர் தெரித்துள்ளார்.
Spread the love