குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விசாரணை நடத்தாது எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியான காரணிகளின் அடிப்படையிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த கைது தொடர்பில் சவால் விடுக்கும் தரப்பினர் மனித உரிமை ஆணைக்குழுவில் இது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடத்தல்கள் கப்பம் கோரல்களுடன் கடற்படையினருக்கு எவ்வித தொடர்பும் கிடையாது எனவும், கடற்படையில் பணியாற்றிய சிலரின் தனிப்பட்ட தேவைகளுக்கு அமைய இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் சட்டத்தின் முன் முப்படையினர், காவல்துறையினர் என வேறுபாடு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.