குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க நிதி வழங்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பணியாளரும், சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான மொஹான் சமரநாயக்க கோரியுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது அமெரிக்காவிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, ஆற்றிய உரையொன்றில் இலங்கை விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மியன்மார், இலங்கை மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுவதற்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாக ஜோன் கெரி கூறியிருந்தார் என அவர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
அப்போதைய அரசாங்கம் மேற்குலக நாடுகளின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தவறியதனால் ஆட்சி மாற்றம் செய்ய மேற்குலக நாடுகள் விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.