ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தமை தொடர்பில் மாணவியான வளர்மதி என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தினைச் சேர்ந்த மாணவி வளர்மதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் துண்டுப்பிரசுரங்களை வினியோகம் செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் கிளை சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
தன்னை மாவோயிஸ்டு என காவல்துறையினர் முத்திரை குத்துகின்றனர் எனவும் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோக்கித்ததாகவும் தெரிவித்த வளர்மதி சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் எனவும் சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதையடுத்து தற்போது கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடர்ந்து மக்கள் நலனுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று இளைஞர்கள் எச்சரித்துள்ளனர்.