Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு எதிரியின் உறவினர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு எதிரியின் உறவினர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரிகளில் ஒருவரின் உறவினர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார் என மாணவி கொலை வழக்கின் 21ஆவது சாட்சியமான உப பொலிஸ் பரிசோதகர் இரான் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முன்பாக சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம் கட்ட சாட்சி பதிவுகள் இன்றைய தினம் செவ்வாய்கிழமை ஆரம்பமானது.
 யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில்  5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
1ம் ,2ம் , 3ம் , மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாம்   மற்றும் சட்டத்தரணி லியகே  , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஏழாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
குற்றபகிர்வு பத்திரத்தில் திருத்தத்திற்கு அனுமதி. 

குறித்த வழக்கில் மேலும் இரு சாட்சியங்களையும் மூன்று சான்று பொருட்களையும் குற்றபகிர்வு பத்திரத்தில் இணைப்பதற்கு மன்றின் அனுமதியினை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் கோரி இருந்தார்.

அதற்கு எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவத்தன ஆட்சேபனை தெரிவித்து மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை மன்று ஏக மனதாக நிராகரித்து , குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தப்படும் வரையில் குற்ற பகிர்வு பத்திரத்தில் , தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்வதற்கு சட்டமா அதிபருக்கு உரித்துண்டு, அதன் பிரகாராம் புதிதாக அணைக்கப்பட இருக்கும் சாட்சியங்கள் இரண்டும் நிபுணத்துவ சாட்சியங்கள் அதனால் அவற்றை புதிதாக சேர்த்துக்கொள்ள மன்று அனுமதி வழங்கியது.
அதன் பிரகாரம் `புதிதாக 52ஆவது சாட்சியாக இரசாயன பகுப்பாய்வு திணைக்கள சிரேஸ்ட அதிகாரியும் , 53 சாட்சியாக ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானியும் நிபுணத்துவ சாட்சியங்களாக இணைத்துக்கொள்ளப்பட்டு உள்ளனர். அதேவேளை சான்று பொருட்களாக பற்றுசீட்டுக்கள் , இரசாயன பகுப்பாய்வு அறிக்கை , மரபணு பரிசோதனை அறிக்கை ஆகியவை புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது.
நள்ளிரவே பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை ஒப்படைத்தனர். 
அதனை தொடர்ந்து வழக்கின் 38 ஆவது சாட்சியமான சண்முகலிங்கம் கார்த்தி சாட்சியமளிக்கையில் ,
நான் புங்குடுதீவினை சேர்ந்தனான். படுகொலை செய்யப்பட்ட மாணவி எனது அப்பாவின் மச்சானின் மகள். நான் பேருந்து நடத்துனராக கடமையாற்றுகிறேன்.
கடந்த 2015 மே மாதம் 13ஆம் திகதி நான் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற போது வித்தியாவை காணவில்லை என அறிந்து கொண்டேன். அதனை அடுத்து வித்தியா வீட்டுக்கு சென்ற போது வித்தியாவின் அம்மம்மா மாத்திரம் வீட்டில் இருந்து அழுது கொண்டு இருந்தார். வித்தியாவின் தாயும் , அண்ணனும் முறைப்பாடு செய்வதற்கு போலிஸ் நிலையம் சென்று இருந்ததாக அறிந்தேன். நான் கொஞ்ச நேரம் வித்தியா வீட்டில் நின்று விட்டு எனது வீட்டுக்கு திரும்பி விட்டேன்.
மறுநாள் 14 ஆம் திகதி வித்தியாவின் சடலம் கிடக்கின்றது. என அறிந்து சடலம் கிடந்த இடத்திற்கு சென்றேன். அங்கே வித்தியாவின் அம்மா அழுது கொண்டு இருந்தார். அண்ணன் மயக்கமாகி வீழ்ந்து இருந்தார்.
அவ்வேளை சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அவ்வேளை வித்தியாவின் அம்மா என்னையே சடலத்தை பொறுப்பேற்று வைத்திய சாலைக்கு போய் வருமாறு கூறினார். அதனை தொடர்ந்து நானும் சடலத்துடன் வைத்திய சாலைக்கு வந்தேன்.
பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை மீண்டும் எம்மிடம் ஒப்படைக்கும் போது நள்ளிரவு 1 மணி இருக்கும். அதன் பின்னர் சடலத்தை புங்குடுதீவுக்கு எடுத்து வந்தோம். மறுநாள் 15ஆம் திகதி இறுதி கிரியைகள் செய்து சடலத்தை நல்லடக்கம் செய்யும் வரையில் நான் அங்கே நின்று இருந்தேன். என சாட்சியம் அளித்தார்.
எதிரிகளின் வீடுகளுக்கு தீ வைத்தது யார் ?
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவத்த குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார். அதன் போது ,
கேள்வி :-  மாணவியின் இறப்புக்கு பின்னர் புங்குடுதீவில் கலவரம் இடம்பெற்றதா ?
பதில் :-   இல்லை.  இறுதி கிரியைகள் நடைபெற்று அவர் படித்த பாடசாலைக்கு சடலம் அஞ்சலி நிகழ்வுக்காக கொண்டு வந்த வேளையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கேள்வி :- இறுதி கிரியை நடைபெற்றதற்கு முதல் நாள் 14ஆம் திகதி போராட்டங்கள் நடைபெற்றனவா ?
பதில் :- அது தொடர்பில் எனக்கு தெரியாது. அன்றைய தினம் நான் சடலத்துடன் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வந்திருந்தேன். மீண்டும் புங்குடுதீவு செல்லும் போது நள்ளிரவு 1 மணிக்கு மேல் என்பதனால் அன்றைய தினம் நடைபெற்றமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
கேள்வி :- இறுதி சடங்கு முடிவடைந்த பின்னர் வன்முறைகள் நடைபெற்றனவா ?

பத்தி :- இல்லை.

கேள்வி :- எதிரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதா ?
பதில் :- தெரியாது.
கேள்வி :- நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள எதிரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது தெரியாதா ?
பதில் :- இல்லை தெரியாது. நான் என் வேலையை தவிர வேறு வேலைகளை பார்ப்பதில்லை.
கேள்வி :- தீ வைக்கபப்ட்டத்தை கண்டதே இல்லையா ?
பதில் :- இல்லை.பின்னர் கேள்விப்பட்டு இருந்தேன்.
கேள்வி :- பாதையால் செல்லும் போது எரிந்த வீடு ஒன்றினையும் கண்டதே இல்லையா ?
பதில் :- இல்லை.
இதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவத்த , எதிரிகளின் வீடுகளுக்கு தீ வைத்த கும்பலுக்கு நீரே தலைமை தாங்கி சென்றீர் என நான் எதிரிகள் தரப்பில் கூறுகிறேன் என தெரிவித்தார். தான் அதனை முற்றாக மறுக்கிறேன். என சாட்சியமளித்தவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கு விசாரணை செய்யும் போது ,
மாணவியின் அண்ணா மயங்கி வீழ்ந்து இருந்தார் என சாட்சியம் அளித்து இருந்தீர். அவ்வாறு மயங்கி வீழ்ந்து இருந்தவரை ஆசுவாச படுத்தி அருகில் இருந்தவர்கள் தொடர்பில் குறிப்பிட முடியுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு சாட்சியமளித்தவர்.  ” ஆம் , சந்திரஹாசன் என்பவர் (5ஆம் எதிரி ) மயங்கி வீழ்ந்து இருந்த வித்தியாவின் அண்ணாவை தனது மடியில் சாய்த்து வைத்து இருந்தார் ” என பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து குறுக்கு விசாரணைகள் முடிவடைந்து குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
 
மூவரை முதலில் கைது செய்தோம். 
அதையடுத்து குறித்த வழக்கின் 21ஆவது சாட்சியான உப பொலிஸ் பரிசோதகர் மரகல இரான் சாட்சியமளிக்கையில் ,
நான் தற்போது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகிறேன். சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தேன்.அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்தேன்.
அந்நிலையில் 2015 மே மாதம் 14ஆம் திகதி காலை நான் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த போது , தகவல் கிடைத்தது புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் மக்கள் கூட்டமாக இருப்பதாக அதனை அடுந்த அந்த பகுதிக்கு நான் எனது பொலிஸ் குழுவுடன் அந்த இடத்திற்கு சென்று இருந்தேன்.
ஆலடி சந்தியில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்றால் , பற்றைகாடுகளுக்கு மத்தியில் பாழடைந்த கட்டடங்கள் உள்ள பகுதியில் மக்கள் கூட்டமாக இருந்தது. அந்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் காணப்பட்டது. நான் நின்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டது என தெரிவித்து சடலம் காணப்பட்ட நிலையை மன்றில் விபரித்து கூறினார்.
அவ்வேளை எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்த, குறித்த பொலிஸ் சாட்சி , தகவல் புத்தகத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் தனது வாக்கு மூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்கின்றார். அதனை அனுமதிக்க கூடாது என மன்றில் கோரினார்.
அதனை அடுத்து மன்று , சாட்சியத்திடம் , வாக்கு மூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் , தகவல் புத்தகத்தை பார்த்து சாட்சியம் அளிக்குமாறு அறிவுறுத்தியது.
அதனை தொடர்ந்து சாட்சியம் அளிப்பவர் , தொடர்ந்து தனது சாட்சியத்தை அளித்தார். அதன் போது,
நாம் அன்றைய தினம் சடலத்தினை `பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி விட்டு , எமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா (அப்போதைய ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் அன்றைய தினம் (14ஆம் திகதி) இரவு 10 மணியளவில்  பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் அவர்களது வீட்டுகளுக்கு அருகில் வைத்து கைது செய்தோம்.
மறுநாள் (15ஆம் திகதி ) மாணவியின் இறுதி சடங்கு இடம்பெற்றது. அன்றைய தினம் காலை முதல் இறுதி சடங்கு முடிவடைந்து சடலம் நல்லடக்கம் செய்யப்படும் வரையில் , நான் மாணவி கல்வி கற்ற பாடசாலைக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்தேன்.
அதன் பின்னர் 17ஆம் திகதி மாலை எமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா எம்மை புங்குடுதீவில் உள்ள நாதன் கடைக்கு முன்பாக வருமாறு அழைத்து இருந்தார். அதனை அடுத்து நாம் அந்த இடத்திற்கு சென்று இருந்தோம்.
அந்த கடையில் இருந்து சுமார் 400 மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள இடத்திற்கு வர சொன்னார். நாம் அங்கு சென்ற போது மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐந்து சந்தேக நபர்களையும் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்தோம். அவர்களை கைது செய்த போது அவர்களில் ஒரு சிலர் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாரான நிலையில் வேட்டியுடன் மேலங்கி இல்லாமல் நின்று இருந்தார்கள். அவர்கள் ஐவரையும் ஒரே இடத்தில் வைத்தே கைது செய்தோம்.
உறவினர் ஒருவர் போலீஸில் கடமையாற்றுகிறார். 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எமது பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லவில்லை ஏனெனில் சந்தேக நபர்களில் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதனால் நாம் அவர்களை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லாது குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு  விசாரணைக்காக கொண்டு சென்றோம்.
நாம் அவர்களை குறிகட்டுவான் போலிஸ் காவலரணுக்கு கொண்டு சென்று வாக்கு மூலங்களை பெற முயற்சிக்கும் போது , ஊரவர்கள் ஒன்று திரண்டு ,சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி காவலரணை தாக்கினார்கள்.
அதனால் எமது பொறுப்பதிகாரி மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்று கடற்படையின் உதவியுடன் சந்தேக நபர்களை கடல் வழியாக நீருந்து விசை படகு (வோட்டர் ஜெட்) மூலம் காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிசாரின் உதவியுடன் சந்தேக நபர்களை யாழ்ப்பான தலைமை போலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தோம்.
அன்றைய தினம் இரவு சந்தேக நபர்கள் வாக்கு மூலம் அளிக்கும் நிலைமையில் இல்லாத காரணத்தால் அவர்கள் ஓய்வெடுக்க விட்டு விட்டு நாம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிவிட்டோம்.
பின்னர் மறுநாள் 18ஆம் திகதி அதிகாலை மீண்டும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் சென்று சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை கோபி எனும் தமிழ் போலிஸ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் பெற்றுக்கொண்டு இருந்த வேளை , வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க என்னை தனது அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு அழைத்தார்.
சிவில் உடையில் தமிழ்மாறன் 
அதனை அடுத்து நான் அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அவ்வேளை அங்கு யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபர் பெரேரா , யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசேகர , யாழ்ப்பாண போலிஸ் நிலையத்தில் அப்போது கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் மற்றும் ஒருவர் சிவில் உடையில் இருந்தார். அப்போது சிவில் உடையில் இருந்தவர் யார் என்று தெரியாது பின்னர் அவர் சட்டத்துறை  பீடாதிபதி தமிழ்மாறன் என அறிந்து கொண்டேன்.
அப்போது வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என்னிடம் மாணவி கொலை வழக்கில் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் பற்றியும் என்னிடம் விசாரித்தார். பின்னர் , இந்த வழக்குடன் தொடர்புடைய நபர் ஒருவர் உள்ளார் எனவும் அவர் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முற்படலாம் அதானல் சர்வதேச விமான நிலைய போலீசாருக்கு தகவல் வழங்கி அவர் வெளிநாடு தப்பி செல்லவதனை தடுக்குமாறு சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது கடவுசீட்டு இலக்கத்தை கூறி அந்த தகவல்களை சர்வதேச விமான நிலைய போலீசாருக்கு தகவல் வழங்குமாறு கூறினார். நான் அதனை எமது போலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கூறினேன்.
சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி. 
அதன் பின்னர் நான் மீண்டும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வந்து அங்கு தடுத்து வைக்கபப்ட்டு இருந்த ஐந்து சந்தேக நபர்களிடமும் வாக்கு மூலத்தினை பெற்று , அவர்களை யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் , அவர்களை அப்போதைய ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முற்படுத்தினோம். அங்கு நீதிவானிடம் ஐந்து சந்தேக நபர்களையும் 48 மணி நேர போலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரினோம். அதற்கு நீதிவான் அனுமதியளித்து இருந்தார்.
ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும்  மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் தொடர்பில் எமக்கு எந்த தகவலும் தெரியாது 18 ஆம் திகதி யாழ்ப்பாண போலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்பாடு பதிவு செய்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பின்னர் மறுநாள் 19 ஆம் திகதி  வெள்ளவத்தையில் வைத்து , மீள கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அறிந்து கொண்டேன். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
  சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணை செய்யும் போது ,
கேள்வி :- சடலத்திற்கு அருகில் துவிச்ச்கர வண்டி எதனையும் கண்டீரா ?
பதில் :- ஆம். பெண்கள் துவிச்சக்கர வண்டி ஒன்றினை கண்டேன்.
கேள்வி :- சடலத்திற்கும் துவிச்சக்கர வண்டிக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருந்தது ?
பதில் :- நான் சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதற்கு முதல் நான் இவ்வாறு ஒரு கொடூர கொலையை கண்டதில்லை. அதனால் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தமையால் சடலத்திற்கும் சைக்கிளுக்கும் இடையிலான தூரம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழக்கில் சான்றாக அணைக்க முடியாது.
அதனை தொடர்ந்து , எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்த , என்னுடைய கட்சி கார்கள் பொலிசாருக்கு முதல் அளித்த வாக்கு மூலத்திற்கும் பின்னர் குற்ற புலனாய்வு துறையினருக்கு அளித்த வாக்கு மூலத்திற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. போலீசாருக்கு முதல் அளித்த வாக்கு மூலம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம். அது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கவோ முரண்பாட்டை முன் வைக்கவோ எனக்கு தனியுரிமை உண்டு என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதற்கு மறுமொழி அளித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல் , இது சட்ட முரணான விண்ணப்பம். என தெரிவித்து அந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு மன்றில் கோரினார்.
அதனை அடுத்து மன்று , எதிரிகளால் போலீசாருக்கு வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழக்கில் சான்றாக அணைக்க முடியாது. என சட்டம் சொல்கின்றது. அவ்வாறு கொடுக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாது. என்பதனால் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை மன்று ஏக மனதாக மன்று நிராகரித்தது.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்த மீண்டும் தனது குறுக்கு விசாரணைகளை முன்னேடுத்தார்.
கேள்வி :- சந்தேக நபர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏதேனும் சான்று பொருட்களை கைப்பற்றி நீர்களா ?
பதில் :- வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட மாணவியின் மூக்கு கண்ணாடியினை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதை மீட்க முடியவில்லை.
கேள்வி :- ஏன் ?
பதில் :- அன்றைய தினம் (18ஆம் திகதி ) யுத்த வெற்றி நாள் அதனால் மக்கள் கூடுவார்கள் அன்று சந்தேக நபர்களை புங்குடுதீவுக்கு அழைத்து செல்வது. நல்லதில்லை என மேல் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதனால் அன்று அழைத்து செல்லவில்லை மறுநாள் நாம் விசாரித்ததில் புங்குடுதீவில் யுத்த வெற்றி நாளுக்காக எவரும் கூடவில்லை என அறிந்து கொண்டோம்.
வீடுகளுக்கு தீ வைப்பு. சான்று பொருட்களை மீட்க முடியவில்லை. 
அதன் பின்னர் மூக்கு கண்ணாடி உள்ளிட்ட சான்று பொருட்களை மீட்க முயற்சித்த வேளை சந்தேக நபர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு அந்த பகுதிகளில் அசாதரண சூழ் நிலை காணப்பட்டமையால் , நாம் சந்தேக நபர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் முகமாக அந்த பகுதிக்கு செல்லவில்லை.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , எதிரிகளை அடித்து துன்புறுத்தி சித்திரவதை புரிந்தே அவர்களின் வாக்கு மூலங்களை பெற்று உள்ளீர்கள் என நான் எதிரிகள் சார்பில் சொல்கிறேன் என தெரிவித்தார். அதனை தான் முற்றாக மறுப்பதாக சாட்சியமளித்தவர் தெரிவித்தார்.
எதிரிகளின் உடலில் காயங்கள் இல்லை. 
அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சாட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கு விசாரணை செய்யும் போது,
கேள்வி :- எதிரிகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திநீர்கள் தானே ?

பதில் :- ஆம்.

கேள்வி :- அதில் எதிரிகளின் உடலில் கீறல் காயங்களோ , வேறு காயங்களோ இருந்தாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததா ?

பதில் :- இல்லை. அவ்வாறு எந்த காயங்களும் சந்தேக நபர்களின் உடலில் இல்லை.
எதிரிகளை சித்திரவதை புரியவில்லை. 
அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னையா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணை செய்யும் போது ,
4 ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளை தலைகீழாக கட்டி தூக்கி பொல்லால் அடித்து துன்புறுத்தி வாக்கு மூலம் பெற்றீர் என கூறுகிறேன். என தெரிவித்தார், அதற்கு சாட்சியளிப்பவர்  இல்லை. அதனை நான் முற்றாக மறுக்கிறேன் என பதிலளித்தார். 9ஆவது சந்தேக நபர் தொடர்பில் உம்மிடம் எந்த சாட்சி ஆதாரமும் இல்லை என கூறுகிறேன். ஆம் என்னிடம் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என சாட்சியமளித்தார் பதிலளித்தார்.
09ஆவது சந்தேக நபர் தொடர்பில் எந்த சாட்சி ஆதாரமும் இல்லாதமையால் தான் அவர் யாழ்ப்பாண பொலிசாரால்  விடுவிக்கப்பட்டார் என கூறுகிறேன். அது தொடர்பில் எனக்கு தெரியாது என சாட்சியமளித்தவர் பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
ஆறு மணித்தியாலம் சாட்சியம். 
இதேவேளை குறித்த பொலிஸ் சாட்சியம் மன்றில் இன்றைய தினம் சுமார் 6 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியம்.
ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர சாட்சியம் அளிக்கையில் ,
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி காலை 8.45 மணியளவில் என்னை யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு வருமாறும் அங்கு வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் நான் அங்கு சென்றேன். அங்கு பிரதி பொலிஸ் மா அதிபரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் இன்னும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அங்கு இருந்தார்கள்.
காலை 9 மணியளவில் வடமாகாண சிரேஸ்ட பிரதி போலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க அங்கு வந்தார். அவர் வந்து சில நிமிடங்களில் தமிழ் மாறனும் அங்கு வந்தார்.
பின்னர் தமிழ்மாறன் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் சட்ட ஒழுங்குகள் குறித்து பேசினார். புங்குடுதீவு சம்பவம் தொடர்பிலும் பேசினார். அதன் போது இந்த சம்பவத்திற்கு சுவிஸ்குமார் என்பவர் பணம் வழங்கியதாகவும் அங்கு பேசப்பட்டது. அதனை அடுத்து சிரேஸ்ட பிரதி போலிஸ் மா அதிபர் , உப பொலிஸ் பரிசோதகர் இரானை அங்கு வருமாறு அழைத்தார்.
சுவிஸ் குமாரை பிடிக்க முடியும். 
அங்கு இரானிடம் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விபரங்களை கேட்டார். அதில் சுவிஸ்குமார் என்பவர் இல்லை. அந்த சந்தர்ப்பத்தில் தமிழ்மாறன் தன்னால் சுவிஸ் குமாரை பிடித்து தர முடியும் என கூறினார். அதற்கு இரு போலிஸ் அதிகாரிகளை தன்னுடன் அனுப்பி வைத்தால் அவரை பிடித்து வர முடியும் என கூறினார். அதனை அடுத்து தமிழ் மாறனின் வெள்ளை நிற கப் ரக வாகனத்தில் உப போலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தரும் சென்று இருந்தனர்.
சுவிஸ் குமார் கைது.
அவர்கள் சென்று இரு மணி நேரத்திற்கு பின்னர் என்னை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட ஸ்ரீகஜன் சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒருவரை கைது செய்து இருக்கின்றோம். அவரை கொண்டு வருவதற்கு வாகன ஒழுங்கினை செய்து தருமாறு கோரினார்.
அது தொடர்பில் நான் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தேன். என சாட்சியம் அளித்தார்.
அதன் போது மன்று ,
கேள்வி :- நீர் சிரேஸ்ட போலிஸ் அத்தியட்சகர் தானே ?
பதில் :- ஆம்.
கேள்வி :- சாதரனமானவர்களுக்கே தெரியும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தான் அறிவிக்க வேண்டும் என அவ்வாறு இருக்கையில் நீர் ஏன் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு அறிவிக்காமல் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தீர் ?
பதில் :- சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்துறை பொலிசாரினால் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டமையால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தேன். என பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து சாட்சியமளிக்கையில் ,
சிறிது நேரத்தில் ஸ்ரீகஜன் என்னை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தமக்கு வாகனம் தேவையில்லை எனவும் தாம் வாகனத்தில் கைது செய்த நபருடன் வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் நான் சிறுது நேரத்தில் ஸ்ரீகஜனுடன் தொடர்பு கொண்டு வரும் வழியில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? என தொடர்பு கொண்டு கேட்டேன் இல்லை என கூறினார்.
பின்னர் பகல் 1 மணி அல்லது 2 மணி இருக்கும் சுவிஸ் குமார் என்பவரை ஸ்ரீகஜன் அழைத்து வந்து இருந்தார். நான் சுவிஸ்குமாரை யாழ்.போலிஸ் நிலையத்தில் முற்படுத்துமாறு கூறினேன்.
சுவிஸ் குமாருக்கு எதிராக சாட்சியம் இல்லை. 
அதற்கு ஸ்ரீகஜன் , சுவிஸ்குமார் என்பவருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தனக்கு ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உப போலிஸ் பரிசோதகர் இரான் கூறியதாகவும் , சுவிஸ் குமாருக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவரை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்த முடியாது. என என்னிடம் கூறினார்.
அதற்கு நான் அவரை சந்தேக நபராக ஆவது முற்படுத்துங்கள் என கூறினேன். அதற்கும் ஸ்ரீகஜன் அவ்வாறும் முற்படுத்த முடியாது என கூறினார்.
இது தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தேன். அவர் ஸ்ரீகஜனை தன்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். அதனை அடுத்து அவரது அலுவலகத்திற்கு ஸ்ரீகஜன் சென்றார்.
சுவிஸ்குமாரை வைத்திய சாலையில் அனுமதிக்க உத்தரவு. 
சிறிது நேரத்தில் மீண்டும் என்னை சந்தித்த ஸ்ரீகஜன் , சாட்சியம் இல்லாத காரணத்தால் , சுவிஸ் குமாரை போலிஸ் நிலையத்தில் முற்படுத்த தேவையில்லை. எனவும் அவருக்கு ஜி.எஸ்.ரி. வழங்கி  , அவரை வைத்திய சாலையில் அனுமதிக்குமாறும் தனக்கு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக ஸ்ரீகஜன் என்னிடம் கூறினார்.
நான் உடனேயே பிரதி போலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு அது தொடர்பில் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக , அதாவது சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு காயங்கள் இருக்குமானால் விரிவான வாக்குமூலத்தை பெற்று ஜி.எஸ்.ரி.வழங்கி அனுப்புமாறு என்னிடம் பிரதி போலிஸ் ம அதிபர் ஜி.கே.பெரேரா தெரிவித்தார். அதனை தொடர்ந்து  நான் ஸ்ரீகஜனிடம் கூறினேன். பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியது போன்று செய்யுமாறு.
அதன் பின்னர் மறுநாள் 19ஆம் திகதி புங்குடுதீவு சர்வோதய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்று இருந்தேன் அங்கு  பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா வடமாகாண சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க மற்றும்  சட்டப்பீட பீடாதிபதி தமிழ்மாறன் ஆகியோர் வந்தார்கள்.
கூட்டத்தில் முதலில் ஆரம்ப உரையை தமிழ்மாறனும் அதன் பின்னர் சிரேஸ்ர பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க சிங்களத்தில் உரையாற்றினார். அவரின் உரை .மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் வைத்தியர் ஒருவர் அதிபர் ஒருவர் பெண் ஒருவர் பின்னர் மீண்டும் தமிழ்மாறன் ஆகியோர் உரையாற்றினார்கள். தமிழ்மாறன் இறுதியாக உரையாற்றும்போது மக்கள் சத்தமிட்டார்கள்.

நாங்கள் பிடித்துக்கொடுத்த சுவிஸ்குமாரை விடுவித்துவிட்டீர்கள். பணம் வாங்கிக்கொண்டுதான் அவரை விடுவித்துவிட்டீர்கள் என

அப்போது , சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்கள் எவையும் இல்லை. நீங்கள் அச் சாட்சியத்தை வழங்கினால் அவரை மீண்டும் கைது செய்வதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க கூறினார்.

அரசியல்வாதியின் தம்பி சுவிஸ் குமாருக்கு எதிராக முறைப்பாடு. 

அதன் போது  அங்கிருந்த அரசியல்வாதியின் சகோதரர் ஒருவர் தான் சாட்சியம் வழங்குவதாக கூறினார். அவரது சாட்சியம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் பதிவு செய்ய கட்டளையிடப்பட்டது.அதன் பின்னர்   நானும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேராவும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் வெளியே வந்து வெள்ளவத்தைப் பொலிஸ்நிலையத்திற்கு தொடர்பு கொண்டோம்.

ஏனெனில் வெள்ளவத்தை பகுதியில் தான் சுவிஸ் குமார் நிற்பதாக கூட்டத்தில் இருந்தவர்கள் கத்தினார்கள். அதன் காரணமாக வெள்ளவத்தைப் பொலிஸாருக்கு தொடர்பு சுவிஸ் குமாரை கைது செய்ய உத்தரவு இட்டோம்.
அதன் பின்னர்  பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா என்னிடம்  கூறினார் ,  வெள்ளவத்தையில் இருந்து குறித்த நபரை இங்கே கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு

நான் எனது பிரத்தியேக உதவியாளர் பிரதான பொலிஸ் பரிசோதகருடன் தொடர்பு கொண்டு மானிப்பாய் பொலிஸ்நிலையத்தின் வாகனத்தைக்கொண்டு யாழ்.பொலிஸ்நிலைய உப பொலிஸ் பரிசோதகருடன் ஆயுதங்களையும் கொண்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று விடயத்தைக்கூறி கைது செய்யப்பட்ட நபரை இங்கே கொண்டு வருமாறு கூறினேன்.

சிறிது நேரத்தில் எனக்கு என்னுடைய பிரத்தியேக உதவியாளாரான பிரதான பொலிஸ் பரிசோதகர் கூறினார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சுற்றி பொது மக்கள் இருப்பதாக,  இதனை நான் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்கவிற்கு கூறினேன். அவர் உடனடியாக என்னை யாழ்.பொலிஸ் நிலையத்திற்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினார். நான் போகும்போது அப்பிரதேசத்தில் வீதிகள் மறிக்கப்பட்ட நிலையில் தடைகள் போடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நான் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்தேன்.

பொலிஸ் பரிசோதகருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை. 
சுவிஸ் குமாரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு   பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு கூறினேன்.
ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. அதன் பின்னர் இது தொடர்பாக எழுத்து மூலமாக  பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு தெரியப்படுத்தினேன்.
அப்போதும் அவர் அதனை செய்யவில்லை. இதன்பின்னர் ஒழுக்க விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலமாக தெரிவித்தேன்.
21ஆம் திகதி சுவிஸ் குமார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
பின்னர் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 125 பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பண்டார உட்பட ஆறு உத்தியோகத்தர்களும் இதனை பொறுப்பெடுத்து மேற்கொள்ளுமாறு கட்டளை வழங்கினேன். அவர்களால் சுவிஸ்குமார் நீதிவான் முன்னிலையில் 21ஆம் முற்படுத்தப்பட்டார். என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More