குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவி கொலைவழக்கில் பிரதான சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்படும் சுவிஸ் குமார் என்பவர் தப்பி செல்ல உதவிய உப பொலிஸ் பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் தலைமறைவாக உள்ளதாக குற்றதடுப்பு புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவித்து உள்ளனர்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் , குறித்த உப பொலிஸ் பரிசோதகர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்க குடிவரவு , குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவு இட வேண்டும் என குற்றபுலனாய்வு துறையினர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை விண்ணப்பம் செய்தனர்.
அதன் போது குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரி ஐ.பி நிஷாந்த சில்வா , மன்றில் தெரிவிக்கையில் மாணவி கொலை வழக்கின் பிரதான சூத்திர தாரி தப்பி செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்ற சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் என்பவரை கைது செய்வதற்கு முயற்சித்த போது அவரை கைது செய்ய முடியவில்லை. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளமையால் , அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரினார்.
குற்றபுலனாய்வு பிரிவின் கோரிக்கையை பரிசீலித்த மன்று ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு மன்று உத்தரவு பிறப்பித்தது.
மாணவி கொலை வழக்கில் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் 19ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் வைத்து வெள்ளவத்தை பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் தப்பி செல்வதற்கு உடந்தையாக அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த லலித் ஜெயசிங்க இருந்தார் என்றும் அவருடன் அக்கால பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் என்பவரும் உடந்தையாக செயற்பட்டார் என குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த லலித் ஜெயசிங்க குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் , உப பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து இருந்த போது குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமறைவாகியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது