குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன், இலங்கையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை சந்தித்ததில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் எம்மர்சன் இலங்கைக்கு பயணம்; செய்திருந்த போது பயங்கரவாத சந்தேக நபர்களை பார்வையிட்டிருந்தார்.
எம்மர்சன் பயங்கரவாத சந்தேக நபர்களை சந்திப்பதற்கு எவ்வாறான அனுமதியை பெற்றுக் கொண்டார் என்பது குறித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிசேன கேள்வி எழுப்பியிருந்தார் எனவும், வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது எனவும் அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியையும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தினார் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும் ராஜதந்திர ரீதியில் பிரச்சினைகள் அணுகப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எதிர்த்து செயற்பட்டதனால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளை புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.