சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை பாராட்டுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வரப்பிரசாதங்களை வழங்கவும், பதவி ஏற்றத்தின்போது விதந்துரைகளை வழங்கவும் பொருத்தமான திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று பாணந்துறை நகர சபை விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘போதைப் பொருட்களற்ற நாடு’ தேசிய செயற்திட்டத்தின் களுத்துறை மாவட்ட நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப்பொருட்களற்ற நாட்டினை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலதிக செயற்பாடுகள் பல எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ; இதன்போது தெரிவித்தார்.
போதைப்பொருட்கள் தொடர்பாக சமூகத்தில் காணப்படும் கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்காது நாட்டையும், சமூகத்தையும் போதைப்பொருளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என ஜனாதிபதி தெரிவித்தார்.
மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் போன்ற போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் இணைந்த நிகழ்வுகள் துயர்மிக்கவை எனத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் இவ்வாறான அச்சம் மிகுந்த போதைப்பொருட்களுடன் தொடர்பான பல குற்றச்செயல்கள் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான அசாதாரண நிகழ்வுகளுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருட்களற்ற நாடு எனும் எண்ணக்கருவினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி அவ்வாறான ஒரு நாட்டினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.