Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலைவழக்கு எதிரிகளில் மூவர் சம்பவ தினத்தன்று கொழும்பில் நின்றதாக சாட்சியம்:-

புங்குடுதீவு மாணவி கொலைவழக்கு எதிரிகளில் மூவர் சம்பவ தினத்தன்று கொழும்பில் நின்றதாக சாட்சியம்:-

by admin
மாணவி படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று எதிரிகளில் மூவர் கொழும்பில் ரெஸ்டாரன்ட்க்கு வந்ததாக அங்கு உணவு பரிமாறுபவராக வேலை செய்யும் நபர் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முன்பாக சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம் கட்ட சாட்சி பதிவுகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள்  இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது.
 யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில்  6 சட்டத்தரணிகள் முன்னிலை. 
1ம் ,2ம் , 3ம் , மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாம்   மற்றும் சட்டத்தரணி லியகே  , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்றைய தின சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
 
ஊர்காவற்துறை நீதிவானுக்கு அழைப்பாணை.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானுக்கு  நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முன்பாக சாட்சியம் அளிப்பதற்காக அழைப்பாணை விடுக்கப்பட்டு உள்ளது.

அது தொடர்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மன்றில்,  குறித்த வழக்கின் 49ஆவது சாட்சியமான ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானை எதிர்வரும் 24ஆம் திகதி மதியம் 2 மணிக்கு சாட்சியம் அளிக்க வருமாறும், மற்றும் அன்றைய தினம் வழக்கின் 52ஆவது சாட்சியமான இரசாயன பகுப்பாய்வு திணைக்கள சிரேஸ்ட அதிகாரியையும் மறுநாள் 53ஆவது சாட்சியமான ஜின்டெக் நிறுவன சிரேஸ்ட விஞ்ஞானியையும் சாட்சியம் அளிக்க வருமாறு அழைப்பாணை விடுக்குமாறு விண்ணப்பம் செய்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட மன்று அழைப்பாணையை அனுப்பி வைக்க பணித்தது.
 கலவரத்தை அடக்க என்னை அழைத்தார்கள்.
அதனை தொடர்ந்து வழக்கின் 41ஆவது சாட்சியமான முன்னாள் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டார சாட்சியம் அளிக்கையில் ,
சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் நான் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தேன். 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர,  யாழில் கலவரங்கள் இடம்பெறுவதாகவும், அதனால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக யாழ்ப்பாணம் வருமாறு அழைத்து இருந்தார்.
அதன் பிரகாரம் நான் யாழ்ப்பாணம் வந்தேன் அப்போது யாழ்ப்பாண சிறைச்சாலை மீது போராட்டகாரர்கள் தாக்குதல் நடாத்துவதாகவும், அதனை கட்டுப்படுத்த அங்கே செல்லுமாறு பணிக்கப்பட்டது. அதனை அடுத்து நான் அங்கே சென்று இருந்தேன். அங்கே இடம்பெற்ற தாக்குதல் காரணமாக எனது கைகளில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது.
அதனால் நான் அங்கிருந்து விலகி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சென்று இருந்தேன். அன்றைய தினம் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்றேன்.
மறுநாள் (21ஆம் திகதி ) காலை 7.30 மணியளவில் என்னை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணித்திருந்தார்.
சுவிஸ் குமாரை விசாரித்தேன்.
அதனை அடுத்து நான் வைத்திய சாலையில் இருந்து அவரது அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். அங்கே புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் உள்ளார் எனவும் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எனக்கு பணித்தார்.
அதன் பிரகாரம் நான் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தேன். விசாரணைகள் ஊடாக,  அவர் சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என அறிந்து கொண்டு அவர் மீது மாணவி கடத்தல்,  வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு அது தொடர்பான B அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்தேன்.
பிணைக்கு ஆட்சேபனை.
அத்துடன் குறித்த நபரை பிணையில் விடுவித்தால் கலவரங்கள் ஏற்படலாம், சந்தேக நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும், சந்தேக நபர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று உள்ளமையால் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன போன்ற காரணங்களை குறித்து பிணை கட்டளை சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு பிணை வழங்க வேண்டாம் என பிணைக்கு ஆட்சேபனை தெரிவித்தும் அறிக்கை சமர்ப்பித்தேன். என சாட்சியமளித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணைகளின் போது ,
கேள்வி :- உமது விசாரணையின் போது ஒன்பதாவது சந்தேக நபர் தான் சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில்  கொழும்பில் இருந்ததாக தெரிவித்தாரா ?
பதில் :- ஆம்.
கேள்வி :- அப்படியாயின் அவர் எப்படி இந்த குற்ற செயலுடன் தொடர்புபட்டார் ?
பதில் :- அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இந்த குற்ற செயலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதன் போது மன்று , ஒன்பதாவது சந்தேக நபர் கொழும்பில் நின்றமைக்கான சாட்சி ஆதாரம் எதுவும் கொடுத்தாரா ? என கேள்வி எழுப்பிய போது சாட்சி இல்லை என பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் , நான் ஒன்பதாவது எதிரி தரப்பில் கூறுகிறேன் நீர் மேல் அதிகாரியின் உத்தரவின் பேரில் விசாரணைகள் எதுவும் முன்னெடுக்காமல், B அறிக்கை தயார் செய்து நீதிமன்றில் முற்படுத்தியதாக என கூறினார். அதற்கு சாட்சியமளித்தவர். அதனை நான் முற்றாக மறுக்கிறேன். நான் விசாரணைகளை முன்னெடுத்தேன். என தெரிவித்தார். அதனை அடுத்து குறித்த சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டு சாட்சி வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டது.
மாணவி கொலை செய்யப்பட்ட தினத்தன்று நாலாம் எதிரி கொழும்பில் கசீனோ சென்றார்.
அதனை தொடர்ந்து வழக்கின் 44ஆவது சாட்சியமான, கொழும்பில் உள்ள கசீனோ நிலையம் ஒன்றின் முகாமையாளரான பிரியந்த பஸ்ஸநாயக்க சாட்சியம் அளிக்கையில் ,
எமது கசீனோ நிலையத்திற்கு வந்திருந்த குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் ஒருவரின் பெயரை கூறி அவர் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வந்து இருந்தாரா ? என கேட்டனர். நான் அவர்கள் கூறிய பெயரினை பதிவேட்டில் தேடினேன். இல்லை அங்கத்தவர என தேடினேன். அங்கத்தவரும் இல்லை.
அதன் பின்னர் அவர்கள் CCTV  பதிவுகளை பார்த்தனர். அதில் அவர்கள் ஒருவரை அடையாளம் கண்டு கொண்டனர். குறித்த நபர் அன்றைய தினம் (13ஆம் திகதி) பகல் வேளை முச்சக்கர வண்டியில் ஒருவருடன் வந்து இறங்கி உள்ளே வந்து இருந்தார். குற்ற தடுப்பு புலனாய்வாளர்கள் முச்சகரவண்டியில் வந்திறங்கிய மற்றுமொரு நபருடனேயே வந்திருந்தனர். என சாட்சியம் அளித்தார்.
அன்றைய தினம் (13ஆம் திகதி) CCTV பதிவுகளை பார்வையிட்டு அடையாளம் கண்டு கொண்ட நபர் எதிரி கூண்டில் நான்காவதாக உள்ளார் (மகாலிங்கம்  சசிதரன்) என சாட்சி அடையாளம் காட்டினார். அதனை தொடர்ந்து குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டு சாட்சி வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டது.
 
மது அருந்த மூன்று எதிரிகள் வந்து இருந்தனர்.
அதனை அடுத்து வழக்கின் 45ஆவது சாட்சியான ஆறுமுகம் செல்வக்குமார் என்பவர் சாட்சியம் அளிக்கையில் ,
நான் கொழும்பில் ஒரு ரெஸ்டாரன்ட் ஒன்றில் வெயிட்டராக உள்ளேன். 13 ஆம் திகதி மாலை 5 மணியளவில் ரெஸ்டாரன்ட்க்கு 5 , 6 பேர் வந்தார்கள் அவர்கள் சாராயம் , கொக்ககோல மற்றும் உணவு ஆகியவற்றை வாங்கி இருந்தார்கள் அங்கே சுமார் 45 நிமிடங்கள் இருந்தார்கள்.
அவர்கள் எதிரி கூண்டில் 7ஆவதாக (பழனி ரூபசிங்கம் குகநாதன் ) உள்ள நபர் அடிகடி அங்கு வருவார். 4 ஆவதாக உள்ள (மகாலிங்கம் சசிதரன் ) நபர் எப்பாவது இருந்துட்டு 7ஆவது நபருடன் வருவார். 9ஆவதாக உள்ள நபர் (மகாலிங்கம் சசிக்குமார்) 13ஆம் திகதி அன்றே வந்து இருந்தார்.  அவர் தொப்பி அணிந்து வந்து உள்ளே வந்ததும் தொப்பியை மேசை மீது கழட்டி வைத்தார்.  என சாட்சியம் அளித்தார்.
அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டது.
 
நான்கு எதிரிகள் கொழும்பில் நின்றனர். 
அதனை அடுத்து வழக்கின் 46ஆவது சாட்சியான இராமையா கனகேஸ்வரன் சாட்சியம் அளிக்கையில் ,
நான் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தங்குமிடம் (லொட்ஜ்) ஒன்று நடாத்தி வருகிறேன். எமது தங்குமிடத்தில் தங்குபவர்களின் பெயர் விபரங்களை எடுத்து  அவர்களின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பிரதி எடுத்தே தங்க அனுமதிப்போம். எமது தங்குமிடத்தில் தங்குபவர்களின் பெயர் விபரங்கள் தினமும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைப்போம்.
சுவிஸ் குமாரை வெள்ளவத்தை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி எமது தங்குமிடத்தினை வெள்ளவைத்தை போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்துவதாக அங்கு வேலை செய்யும் பையன் எனக்கு அறிவித்தான். நான் உடனே அங்கே சென்றேன்.
அவர்கள் எமது தங்குமிடத்தில் தங்கி இருந்த சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர். அதன் போது அவருடன் அங்கு தங்கி இருந்த அவரது மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகியோர் எமது தங்குமிடத்திலையே தங்கி இருந்தனர்.
அப்போது கைது செய்து கொண்டு செல்லப்படும் நபர் அன்றைய தினம் (19ஆம் திகதி) காலையில் தான் வான் ஒன்றில் வந்திறங்கி தங்கியதாக அங்கு வேலை செய்யும் பையன் தெரிவித்தான்.
அதன் பின்னர் மாலை கைது செய்யப்பட நபரின் மனைவி மற்றும் பிள்ளையுடன் நான் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்றேன்.அப்போது போலீசார் கைது செய்யப்பட்டவரின் மனைவி பிள்ளைகளை தங்குமிடத்தில் தொடர்ந்து தங்க வைக்குமாறு கூறினார்கள். அதனை அடுத்து அவர்களை நான் மீண்டும் தங்குமிடம் அழைத்து வந்தேன்.
பின்னர் மாலை 5.30 மணியளவில் கைது செய்யபப்ட்டவரின் தாயார் வந்து தான் அவர்களை தன்னுடன் அழைத்து செல்ல போவதாக கூறினார். நான் அது தொடர்பில் போலீசாருக்கு தெரியப்படுத்தினேன். அவர்கள் பொலிஸ் நிலையம் அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் அனுப்பி வைத்தனர்.
அதேவேளை அன்றைய தினம் (19ஆம் திகதி) கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் தன்னுடன் மேலும் மூவரை அழைத்து வந்து 2015 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையிலான கால பகுதியில் எதிரிக்கூண்டில் 4ஆவதாக நிற்கும் (மகாலிங்கம்  சசிதரன் ) , 7ஆவதாக நிற்கும் (பழனி ரூபசிங்கம் குகநாதன்) மற்றும் 8 ஆவதாக நிற்கும் (ஜெயதரன் கோகிலன்) ஆகிய நபர்களுடன் எமது தங்குமிடத்தில் தங்கி இருந்தார்கள்.
14ஆம் திகதி ஊரில் ஒரு மரண சடங்கு இருப்பதாக கூறி தாம் ஊருக்கு போக போவதாக கூறி சென்றார்கள். அதன் போது அவர்கள் எமக்கு தங்குமிட வாடகை காசு 12 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அந்த பணத்தினை மோதரையில் பெற்று தருவதாக கூறி, பணத்தினை கொடுத்து அனுப்பவதற்கு அங்கே வேலை செய்யும் பையன் ஒருவனை தம்முடன் அனுப்புமாறு கோரினார்கள்.
நானும் ஒரு பையனை பணத்தினை பெற்று வர அவர்களுடன் அனுப்பினேன். அவர்கள் சிறிது தூரம் பையனை அழைத்து சென்று ஆயிரம் ரூபாய் பணத்தினை கொடுத்து விட்டு மிகுதியினை எனது பெயரில் வங்கியில் வைப்பு செய்து விடுவதாக கூறு பையனை திருப்பி அனுப்பி விட்டனர்.
எங்கள் தங்குமிடத்திற்கு முன்பாக புங்குடுதீவை சேர்ந்தவர்கள் உணவகம் நடாத்தி வருகின்றார்கள். அவர்கள் 18 ஆம் திகதி காலை சொன்னார்கள் “உங்கள் தங்குமிடத்தில் தங்கி இருந்தவர்கள் தான் , புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி , வன்புணர்ந்து , கொலை செய்தவர்கள் ” என இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. என்று. உடனே நான் எனதுமருமகனை அழைத்து மடிக்கணியில் இணையத்தளத்தில் அந்த செய்தியினை பார்த்தேன். அதில் சுவிஸ் குமார் மின் கம்பம் ஒன்றில் கட்டி வைத்து தாக்கப்படும் படம் இருந்தது.  என சாட்சியம் அளித்தார்.
அதனை தொடர்ந்து அவரது சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டது.
ஸ்ரீகஜன் , சுவிஸ் குமாரை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தவில்லை.
அதை அடுத்து வழக்கின் 51ஆவது சாட்சியான ரஞ்சித் பாலசூரிய சாட்சியம் அளிக்கையில் ,
சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் நான் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தேன். மாணவி கொலை வழக்கு தொடர்பில் எமது பொலிஸ் நிலையத்தினால் எந்த விசாரணைகளும் முன்னேடுக்கப்படவில்லை.
இருந்த போதிலும் எமது பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் தலைமையில் ஒரு விசேட பொலிஸ் குழு ஒன்றினை மாணவி கொலை வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமைத்து இருந்தார்.
மாணவி கொலை வழக்கு தொடர்பில் ஸ்ரீகஜன் எந்த ஒரு சந்தேக நபரையும் கைது செய்து எமது பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தவில்லை. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்ற வகையில் எவரையாவது கைது செய்து பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினால் எனக்கு அறிவிக்க வேண்டும்.
ஆனால் ஸ்ரீகஜன் மாணவி கொலை வழக்கு தொடர்பில் ஒருவரை கைது செய்து பின்னர் விடுவித்தாக ஒரு பிரச்சனை நடந்ததாக அறிந்து கொண்டேன்.
ஸ்ரீகஜன் புங்குடுதீவில் இருந்து  மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை  அழைத்து வந்து , சசிக்குமார் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் சசிக்குமார் அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.
சுவிஸ் குமார் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கூறியதாக , ஸ்ரீகஜன் கூறினார் , சுவிஸ் குமார் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும் என , அதற்கு நான் கூறினேன். அது தொடர்பில் நீதிமன்ற கட்டளையை பெற்று உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆனால் பின்னர் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் ஸ்ரீகஜனால் எடுக்கப்படவில்லை.
20 ஆம் திகதி யாழில் போராட்டம்.
19ஆம் திகதி யாழ்ப்பணத்தில், போராட்டங்கள், கடையடைப்புகள் நடைபெற்றன. 20ஆம் திகதி யாழ்.நகர் உட்பட புற நகர் பகுதிகள் எங்கும் போராட்டங்கள் , கடையடைப்புகள் நடைபெற்றன.
மாணவி கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யபப்ட்ட ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமையினால் , அவர்களை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கபப்டும் என மக்கள் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியினை சூழ்ந்தனர்.
மாணவி கொலை வழக்கில் சட்டம் நீதி காப்பற்றப்பட வேண்டும் எனவும் , சந்தேக நபர் ஒருவரை தப்பி செல்ல உதவியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிளர்ந்து எழுந்த மக்கள் நீதிமன்ற கட்ட தொகுதி , சிறைச்சாலை வாகனம் ,  யாழ்.சிறைச்சாலை , யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் மற்றும் யாழ்.நகர் பகுதியில் இருந்த சில கடைகள் மீது கற்களால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டனர்.
அந்த தாக்குதல் சம்பவம்தொடர்பில் அப்போது 139 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபப்ட்டது.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 21ஆம் திகதி அதிகாலை தான் சுவிஸ் குமார் எனும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை என்னிடம் பாரம் தந்தார். என சாட்சியமளித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டது.
அதையடுத்து , பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறித்த வழக்கின் 47 மற்றும் 48ஆவது சாட்சியங்களை விடுவிப்பதாக மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை மன்று ஏற்று குறித்த இரு சாட்சியங்களையும் வழக்கில் இருந்து முற்றாக விடுவித்தது.
அதனை தொடர்ந்து இன்றைய வழக்கு விசாரணைகள் மதியம் 12.45 மணியுடன் நாளை காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.அதுவரையில் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More