இந்தியா முழுவதும் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 11ஆயிரத்து 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்து பேசிய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை 1.5 மடங்கு உயர்த்தி தருவதாக சுட்டிக்காட்டிய அவர் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்திருந்தமைக்கமைய பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 3,560 கோடி ரூபா பிரிமியம் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.