குடியேற்றத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த கூழாமுறிப்புக் காட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சாம்பராகிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தத் தீ இயற்கையாக உருவானதாகத் தெரியவில்லை. திட்டமிட்ட ரீதியில் இதனை எரித்ததாகவே வலுவாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. என வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்புப் பகுதியில் காடழித்து குடியேற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டவிரோத காடழிப்பு, குடியேற்றத்தை எதிர்த்து இளைஞர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், கூழாமுறிப்புக் காட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சாம்பராகியுள்ள சம்பவம் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இது இயற்கையாக நடந்ததைப் போன்று தெரியவில்லை. திட்டமிட்ட ரீதியில், காட்டை அழித்து வெட்டவெளியாக்கும் முயற்சியின் முன்நகர்வாகவே நோக்கவேண்டியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்ற தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்கப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை. ஒரு சமூகத்திற்கு மாத்திரம் காணிகள் வழங்கப்பட்டுக் குடியேற்றம் நடைபெறுவதைத்தான் எதிர்கின்றோம். எமது மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகின்றார்கள். வன்னியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், இரு இனங்களிடையேயும் விரிசல் ஏற்படுத்தி, இனவாதத்தைக் கிளறி விடும் வகையில் செயற்பட்டு வருகின்றார். முஸ்லிம் மக்களே அவரால் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர்.
இந்தப் பின்னணிகளை எல்லாம் அடிப்படையாக வைத்து நோக்கும் போது, இந்தக் காடு தீயில் எரிந்து சாம்பரானதை வெறும் சாதாரண சம்பவமாகக் கடந்து செல்ல முடியாது. மாவட்ட நிர்வாகம், எவருக்கும் பக்கம் சாராமல் உரிய விசாரணை நடத்திக் குற்றவாளிகள் கண்டறியப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோருகின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.