குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமராட்சி பகுதியில் கடலோரகாவல் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் , நிலைமைகளை நேரில் ஆராயவும் இன்றைய தினம் கடற்படை தளபதி வடமராட்சி பகுதிக்கு சென்று இருந்தார்.
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்று மண் கடத்தல் அதிகரித்து காணப்படுகின்றது. அந்நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மண் கடத்தலில் ஈடுபட்டவர்களை சோதனையிட முயற்சித்த கடலோர காவல் படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து கடலோரகாவல் படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்று இருந்தனர். அதேவேளை அப்பகுதியில் காவல் கடமையில் இருந்த சீருடை தரித்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலும் நடாத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நிலையிலையே இன்றைய தினம் அப்பகுதிக்கு நேரில் சென்ற கடற்படை தளபதி நிலைமைகளை ஆராய்ந்து மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவு இட்டு சென்றுள்ளதுடன் , பாதுகாப்புக்களை பலப்படுத்தவும் உத்தரவு இட்டுள்ளார்.