Home இலங்கை காணி விடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்

காணி விடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்

by admin

இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதில் கையாளப்படுகின்ற அணுகுமுறை, பொறுப்பு மிக்க ஓர் அராசங்கத்தின் செயற்பாடாகத் தோற்றவில்லை. பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாகக் கூறி கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே இராணுவத்தினரும் அரசாங்கமும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பது கேப்பாப்பிலவு காணி விடுவிப்புச் செயற்பாட்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அடாத்தாக பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தமது தேவைக்குரிய காலம் முடிவடைந்த பின்னரும். அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு உடன்படாத ஒரு போக்கிலேயே இராணுவக் கட்டமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகியிருக்கின்றது.
பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றியுள்ள இராணுவம் அந்தக் காணிகள் தேசியபாதுகாப்புக்காகவே கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற இராணுவத்தின் கூற்றையும், இந்த நிகழ்வு கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது. அத்துடன் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை பாதிக்கப்பட்ட மக்களாகிய உரிமையாளர்களிடம் கையளிப்பதில் கையாளப்படுகின்ற நடைமுறைகள் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை நோக்கத்தைக் கொண்ட மறைமுகமான ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றதோ என்ற நியாயமான சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
நம்பிக்கையும் போராட்டமும்
நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கமே இப்போது ஆட்சியில் இருக்கின்றது. இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக வாக்களித்த மக்களில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு முக்கிய இடமுண்டு.
முன்னைய அரசாங்கத்தின் அளவுக்கு மீறிய கெடுபிடிகள், நெருக்குதல்கள், அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிராகத் துணிச்சலோடு இடம்பெயர்ந்த மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்திருந்தார்கள்.  கடந்த பொதுத் தேர்தலின்போது, முன்னைய அரசாங்கத்தைச் சார்ந்தவர்களையே வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதில் ஆயுதப்படையினரும் வன்னிப்பிரதேசத்தில் தீவிர பரப்புரைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். தமது பிரசாரத்திற்கு எதிராக எவரும் வாக்களிக்கத் துணியக்கூடாது என்பதற்காக வடமாகாண வாக்காளர்கள் பல்வேறு வழிகளில் நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். பல்வேறு வழிகளில் அவர்கள் அப்போது அச்சுறுத்தப்பட்டிருந்தார்கள்.
ஆயினும் முன்னைய அரசாங்கத்தின் நடைமுறைகளினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த மக்கள், எத்தகைய விளைவுகள் ஏற்பட்;டாலும்சரி என்ற மன நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தை அரியணையில் ஏற்றுவதற்காகத் துணித்து வாக்களித்திருந்தார்கள்.
அந்தத் தேர்தலின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசாங்கம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நம்பி அந்த மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தார்கள்.
தங்களுடைய ஆதரவில் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளும். தமது காணி மீட்புப் பிரச்சினை உட்பட தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் புதிய அரசாங்கம் தீர்த்து வைக்கும். யுத்தத்தினால் அழிந்து போன தமது வாழ்க்கையை அதன் மூலம் மீளவும் கட்டியெழுப்பிக் கொள்ள முடியும் என்று அவர்கள் மனமார நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கை அவர்கள் எதிர்பார்த்த வகையில் நிறைவேறவில்லை.
இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பதில் மந்த கதியிலான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்தது. யுத்த மோதல்களோ அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களே அற்ற நிலையிலும், இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகள் தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமானவை. எனவே அந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்று இராணுவம் நியாயம் கூறிக்கொண்டிருந்தது. இதனையடுத்தே பாதிக்கப்பட்ட மக்கள் தமது காணிகளை மீட்பதற்காக அறவழிப் போராட்டத்தில் குதித்தார்கள். இந்தப் போராட்டத்தில் கேப்பாப்பிலவு போராட்டம் முக்கியமானது. இது 140 நாட்களைக் கடந்து, தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
180 ஏக்கர் காணிவிடுவிப்பின் தன்மை
இராணுவத்தின் பிடியில் உள்ள கேப்பாப்பிலவு கிராம மக்களுடைய 180 ஏக்கர் காணிகள் 19 ஆம் திகதி புதன்கிழமை விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவமும் உடன்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் அன்றைய தினம் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு, அதில் புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் கலந்து கொள்வதற்காக கேப்பாப்பிலவுக்குச் சென்றிருந்தார்.
ஆனாலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக அறிவித்திருந்த இராணுவம், அதற்குப் பதிலாக காட்டுப்பிரதேசமாகக் காட்சியளிக்கின்ற மத்திய வகுப்புப் பிரிவின் கீழ் ஆறு பேருக்கு வழங்கப்பட்டிருந்த காணிகளையே விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. காணி மீட்புக்கான போராhட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் இதனை அறிந்ததும் ஆத்திரமுற்றனர்.
தங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, இராணுவம் ஆறு பேருக்கு மட்டும் சொந்தமான காணிகளையே விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து தங்களை ஏமாற்ற முயற்சித்திருந்ததை அறிந்து அவர்கள் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்கள்.
இதனால் காணி விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த அமைச்சர் சுவாமிநாதன், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஆகியோரை, நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இராணுவ முகாமுக்குள் செல்லவிடாமல் தடுத்து, வழி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, ஆறு பேருக்குச் சொந்தமான 180 ஏக்கர் காணிகளை ஏமாற்றுத்தனமான முறையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமைச்சர் சுவாமிநாதனுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த ஏமாற்று நாடகத்தில் அமைச்சர் சுவாமிநாதனும் ஒரு பங்கேற்றிருந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். ஆயினும் விடுவிக்கப்படுவதற்கு இராணுவத்தினரால் உத்தேசிக்கப்பட்டிருந்த காணிகள் பற்றிய விபரங்களை அறியாதவராகவே அமைச்சர் சுவாமிநான் கேப்பாப்பிலவுக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்தக் காணிகளை நேரடியாகப் பார்வையிடுவதற்காக இராணுவப் பிரதேசத்தின் உள்ளே செல்வதற்கு வழிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனுமதித்திருந்தனர்.
‘இங்கு வந்த பின்பே உண்மையை அறிந்தேன்’
கேப்பாப்பிலவில் பொதுமக்களுக்குச் சொந்தமான 180 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவிப்பதாகவே தான் நம்பியிருந்ததாக தங்களை இராணுவ முகாம் பிரதேசத்திற்குள் செல்லவிடாமல் வழிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன், கேப்பாப்பிலவுக்கு வந்த பின்பே உண்மை நிலையைத் தெரிந்து கொண்டதாகக் கூறினார்.
காணி மீட்புக்காகப் போராடி வருகின்ற மக்களுடைய காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே தான் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களுடைய காணிகளை  விடுவிப்பதற்காக இராணுவம் கோரியிருந்த 5 மில்லியன் ரூபா நிதியை மீள்குடியேற்ற அமைச்சில் இருந்து வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மேலும் 148 மில்லியன் ரூபாவை இராணுவத்திற்குத் தனது அமைச்சின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் பொதுமக்களுடைய காணிகளை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, நடுத்தர வகுப்பு காணிப்பிரிவின் கீழ் முன்னர் வழங்கப்பட்ட 6 பேருக்குச் சொந்தமான காணிகளையே இந்த 180 ஏக்கர் காணி விடுவிப்பின்போது, கையளிக்கப்படவுள்ளன என்பதை இங்கு வந்தபின்பே அறிந்து கொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த மோதல்களின்போது பாதுகாப்பு காரணங்களுக்காகத் தமது ஊரைவிடடு இடம்பெயர்ந்த மக்களுடைய காணிகளில் தமது நிலைகளை அமைந்திருந்த இராணுவம் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அங்கிருந்து வெளியேறியிருக்க வேண்டும். அதுவே இறைமையுள்ள ஒரு ஜனநாயக நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான இராணுவத்தின் நியாயமான செயற்பாடாகும். ஆனால், இங்கு வடமாகாணத்தில் அவ்வாறு இராணுவம் நடந்து கொள்ளவில்லை.
தேசிய பாதுகாப்பைக் காரணம்காட்டி,  பொதுமக்கள் செறிந்த வாழ்கின்ற ஊர்மனைப் பிரதேசங்களில் தமது நிலைகளை நிரந்தரமாக்கியுள்ள பாதுகாப்புப் படையினர், பொதுமக்களுடைய காணிகளை விட்டு வெளியேறிச் செல்வதற்கு, தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் குறிப்பாக மீள்குடியேற்றப் பிரதேசங்களில் இராணுவ முகாம்களை வலிந்து நிறுவுவதில் முன்னைய அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. போக்குவரத்து வசதிகள், படையினருக்கான நிரந்தர குடியிருப்புக்கள், அலுவலகங்கள், மற்றும் அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், பொழுது போக்கு அம்சங்கள் சார்ந்த வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த இராணுவ முகாம்கள் நிரந்தர முகாம்களாக அந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டன. அதற்கான நிதி பாதுகாப்பு அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரியணை ஏறிய நல்லாட்சி அரசாங்கம் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களைக் குறைப்பதில் அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. பொதுமக்களின் காணிகளை இராணுவம் கையளிக்கும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன் மூலம் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய கொட்டில்களில் சென்று சந்தித்து உறுதியளித்த போதிலும், காணிகளை விடுவிக்கும் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்குக் காசா…..? 
இத்தகைய பின்னணியில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு கிராம மக்களுக்குச் சொந்தமான காணிகளில் நிலைகொண்டுள்ள படையினர், அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு பணம் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
கேப்பாப்பிலவில் பொதுமக்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்ட காணிகளையே படையினர் கையகப்படுத்தி அங்கு நிரந்தரமான கட்டிடங்களை அமைத்து நிலைகொண்டிருக்கின்றார்கள். இதனால், யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இடம்பெயர்ந்த மக்கள் அவரவருடைய சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யபட்ட போதிலும், கேப்பாப்பிலவு மக்களால் தமது சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை.
ஊருக்கு வெளியே பண்ணைத் தேவைக்காகவும், விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவும் பெரும் இடப்பரப்பில் தனியாருக்;கென காணி வழங்கப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருந்த ஒரு தொகுதி காணியில் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமம் என்ற பெயரில் வீடுகளைக் கட்டிக்கொடுத்து இடம்பெயர்ந்திருந்த கேப்பாப்பிலவு ஊர் மக்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.
ஆனாலும் அந்த மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையிலேயே பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு 5 மில்லியன் ரூபா நிதி வழங்க வேண்டும் என்ற நிபந்தனை படைத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. அந்த நிதியை மீள்குடியேற்ற அமைச்சில் இருந்து வழங்குவதற்கு அமைச்சர் சுவாமிநாதன் முன்வந்தார்.
யுத்தம் காரணமாகவே மக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் அவர்களை அவர்களுடைய சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றி, அவர்களுக்கான மீள்குடியேற்ற வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும்.
இடம்பெயர்ந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தால், அவர்களை அத்தியாவசிய தேவை கருதி வேறிடங்களுக்கு நகர்த்துவதா அல்லது அவர்களை வடக்கில் இருந்து அழைத்துக் கொள்வதா என்பதைத் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்திற்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளையும் அரசாங்கமே எடுக்க வேண்டும்.
பொதுமக்களுடைய காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் எடுக்கின்ற தீர்மானங்களை இராணுவத்தினருடன் தொடர்புடைய பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவசியமான சந்தர்ப்பங்களில் நேரடியாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும்,அரசாங்கத்திற்கு உரிமையும், அதிகாரமும் இருக்கின்றன. அந்த வகையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், கேப்பாப்பிலவு பொதுமக்களுடைய காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் அந்தக் காணிகளை விடுவிப்பதற்குப் பணம் தரவேண்டும் என்ற கோரிக்கை படைத்தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று புனர்வாழ்வு அமைச்சின் நிதியில் இருந்து ஏற்கனவே 5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார். அத்துடன் மேலும் 148 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்;.
யுத்தம் நடைபெற்ற போதும்சரி, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும்சரி, மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பாதுகாப்பு செலவினங்களுக்கே முன்னுரிமையளித்து வரவு செலவுத் திட்டத்தில் அதிகூடிய நிதியை ஒதுக்கீடு செய்து வந்தன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னரும், பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்பீட்டளவில் அதிக அளவு நிதி ஒதுக்கப்படுவது குறித்து பலரும் வினா எழுப்பினர். விமர்சனங்களும் எழுந்திருந்தன.
ஆனால், யுத்தம் முடிந்துவிட்ட போதிலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. எனவே, தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அதன் காரணமாகவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படுகின்றது என்று அரசாங்கத் தரப்பில் காரணம் கூறப்பட்டது. பாதுகாப்பு அமைச்சுக்கு யுத்தத்தின் பின்னர் அதிக நிதி ஒதுக்கீடு செய்வதை இந்தக் காரணத்தைக் காட்டி அரசாங்கம் நியாயப்படுத்தியிருந்தது. நல்லாட்சி அரசாங்கத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு முன்னுரிமையளிக்கும் போக்கில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.
ஏன் நிதி வழங்க வேண்டும்?   
இராணுவ முகாம்களை நிறுவுவதோ, ஏற்கனவே அமைக்கப்பட்ட முகாம்களை விஸ்தரிப்பதோ அல்லது ஓரிடத்தில் இருந்த இன்னுமோர் இடத்திற்கு மாற்றி அமைப்பதோ இராணுவ முகாம் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பாகும். பாதுகாப்பு அமைச்சே அந்த செலவினத்துக்கான நிதியை வழங்க வேண்டும். இராணுவத்தினர் சார்ந்த வேலைத்திட்டங்கள் மற்றும் செலவினங்களுக்காகவே பாதுகாப்பு அமைச்சுக்கென தனியாக தேசிய வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அதுவும் இலங்கையைப் பொறுத்தமட்டில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதனால், பாதுகாப்பு அமைச்சுக்கு விசேடமாக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் பொதுமக்களுடைய காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிப்பதற்காக நிதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது.
பொதுமக்களுடைய காணிளை மீளக் கையளிக்க வேண்டியது இராணுவத்தின் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு (இராணுவத்திற்கு தவிர்க்க முடியாத தேவைகள் இருக்கலாம். இருந்தாலும்….) நிதி வழங்கப்பட வேண்டும் என்று கேட்பது, பாதி;க்கப்பட்ட மக்களாகிய காணி உரிமையாளர்களிடம் கப்பம் கேட்கின்ற ஒரு நடவடிக்கையாகவும் சந்தேகிப்பதற்கு இடமுண்டு.
மீள்குடியேற்ற அமைச்சின் அமைச்சர் என்ற வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய காணிகள் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மனிதாபிமான அடிப்படையில் இராணுவம் கோரிய நிதியை தனது அமைச்சில் இருந்து வழங்குவதற்கு அமைச்சர் சுவாமிநாதன் முன்வந்திருக்கலாம்.
அந்த நல்லெண்ணம் சார்ந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியதே. எனினும், புனர்வாழ்வு அமைச்சுக்கு இடம்பெயர்ந்து மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலான செயற்பாடுகளுக்கும் வேரைத்திட்டங்களுக்குமே நிதி ஒதுக்கப்படுகின்றது. அவ்வாறு ஒதுக்கப்படுகின்ற நிதியானது, பொதுமக்களுக்குப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக இராணுவத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்காக வழங்கப்படுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை.
இராணுவத்திற்குத் தேவையான நிதியை பாதுகாப்பு அமைச்சிடமிருந்தோ அல்லது நேரடியாக அரசாங்கத்திடமிருந்தோ பெற்றுக்கொள்ளத் தக்க வசதி இருக்கின்றது. இந்த நிலையில் புனர்வாழ்வு அமைச்சின் நிதியில் இருந்து வழங்குவது முறையற்ற நடவடிக்கையாகவே தோன்றுகின்றது.
புனர்வாழ்வு அமைச்சின் நிதி இவ்வாறு இராணுவத்திற்கு வழங்கப்படும்போது, புனர்வாழ்வுச் செயற்பாடுகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பாதிக்கப்படப் போவது இடம்பெயர்ந்த மக்களே. அதுவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களே என்பதில் சந்தேகமில்லை.
எனவே, பாதுகாப்புத் தரப்பினர் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக நிதிகேட்பதும், அந்த நிதி புனர்வாழ்வு அமைச்சிலிருந்து வழங்கப்படுவதும் மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழான செயற்பாட்டின் விளைவாகவே நோக்க வேண்டியிருக்கின்றது. எனவேதான் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பதில் கையாளப்படுகின்ற அணுகுமுறையானது அரசியல் ரீதியான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இது குறித்து இடம்பெயர்ந்த மக்களின் நலன்களுக்கான அக்கறையில் நாட்டம் உள்ளவர்கள் கவனமெடுக்க வேண்டியது அவசியம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More